இனி போக்குவரத்து வாகனங்களுக்கு 2 ஆண்டுக்கு ஒருமுறைதான் எப்.சி. : போக்குவரத்துத் துறை அறிவிப்பு

இனி புதிதாக வரும் பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கு இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை எஃப்.சி. (தரச் சான்று) என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் சாலைப் போக்குவரத்தில் வாகனங்களுக்கு தகுதியைச் சோதித்து தரச் சான்று (FC) வழங்கப்படும். தனியார் வாகனங்களுக்கு 15 ஆண்டுகள் கழித்து தகுதிச் சோதனை நடத்தப்படும் (வெள்ளை நம்பர் பிளேட்).

ஆனால், போக்குவரத்து வாகனங்கள்  (மஞ்சள் நிற நம்பர் பிளேட்) முதல் முறை மட்டும் 2 ஆண்டுகள் கழித்து தகுதிச் சான்றுக்கு வரவேண்டும். அடுத்த ஆண்டுகளில் ஆண்டுதோறும் தகுதிச் சான்று வாங்கவேண்டும். தற்போது மோட்டார் வாகன விதிகள் திருத்தப்பட்ட அடிப்படையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துத் துறை  வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

“தமிழ்நாட்டில் போக்குவரத்து வாகனங்களுக்கு மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989, விதி 62 (1) (i) (b)ன்படி வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆண்டுக்கு ஒரு முறை வாகனத்தை ஆய்வு செய்து , சாலையில் இயக்கத் தகுதி பெற்ற வாகனங்களுக்கு தகுதிச் சான்று  வழங்கி வருகின்றனர்.

தற்போது மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறையினரால் புதிதாக கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்தின்படி, அனைத்து போக்குவரத்து வாகனங்களுக்கு, புதிதாக பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 8 ஆண்டுகள் வரை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையும், 8 ஆண்டுகளுக்கு மேல் உள்ள வாகனங்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறையும் தகுதிச் சான்று வழங்கப்படும் என போக்குவரத்து ஆணையரகம் தெரிவித்துக் கொள்கிறது

இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 1