புதுக்கோட்டை புத்தகத் திருவிழா தொடங்கியது : பள்ளி,கல்லூரி மாணவர்கள் பெருமளவில் பங்கேற்க கலெக்டர் அழைப்பு !

புதுக்கோட்டையில் இன்று தொடங்கி பிப்ரவரி 23வரை  நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவில் மாணவர்கள் பெருமளவில் பங்கேற்று பொது அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார் மாவட்ட கலெக்டர் பி.உமாமகேஸ்வரி.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் நான்காவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா இன்று முதல் 23-ஆம் தேதிவரை புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் நடைபெற்று வருகிறது. புத்தகக் கண்காட்சியை  நேற்று தொடங்கிவைத்து மாவட்ட  கலெக்டர் பி.உமாமகேஸ்வரி பேசியதாவது:

புதுக்கோட்டையில் இதுபோன்ற புத்தகத் திருவிழா சிறப்பாக வடிவமைக்கப்பட்டு நடைபெற்றுவருவது பாராட்டுக்குரியது. இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஏராளமான புத்தகங்களை, வாசகர்கள் பெருமளவில் வாங்கி நமது மாவட்ட மக்கள் புத்தகத் திருவிழாவை ஊக்கப்படுத்த வேண்டும். தமிழக அரசின் தொல்லியல்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள ‘கீழடி’ அரங்கம் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கீழடி அரங்கத்தை அனைத்துத் தரப்பு மக்களும் பார்வையிட்டு தமிழனின் 2600 ஆண்டுகளுக்கும் முந்தைய நாகரிகத்தை உணர வேண்டும்.

விண்வெளி அதிசயத்தை விளக்கும் வகையில் இங்கு அமைக்கப்பட்டுள்ள கோளரங்கம் பிரமிப்பூட்டும் வகையில் உள்ளது. இந்தக் கோளரங்கம் மாணவர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாகும். மேலும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக பல்வேறு அறிவியல் நிகழ்வுகளும் இங்கு திட்டமிடப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. எனவே, வாசகர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் மட்டுமல்லாது  பள்ளி,கல்லூரி மாணவர்களும் பெருமளவில் புத்தகத் திருவிழாவில் கலந்துகொண்டு பொது அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

மாணவர்களுக்கான கோளரங்கத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.வே.அருண்சக்திகுமார், ‘மாதத்திற்கு ஒரு புத்தகத்தை வாசிப்பவர்கள்கூட தங்களை பெரிய படிப்பாளியாகக் காட்டிக்கொள்கின்றனர். இதுபோன்ற புத்தகத் திருவிழாவிற்கு வரும்பொழுதுதான் நாம் எவ்வளவு பின்தங்கி இருக்கிறோம் என்பது தெரியவரும். நாம் கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் பரந்துவிரிந்து கிடக்கிறது என்பதை உணரமுடியும் ‘என்றார்.

புத்தகக் கண்காட்சி தொடக்க விழாவிற்கு கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் த.ஜெயலெட்சுமி, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம், அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினர் லெ.பிரபாரகரன், மாவட்டச் செயலாளர் மு.முத்துக்குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

முன்னதாக புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர் அ.மணவாளன் வரவேற்றுப் பேசினார்., பொருளாளர் ம.வீரமுத்து நன்றி கூறினர். விழா ஒருங்கிணைப்பாளர்கள் நா.முத்துநிலவன், அ.ராஜ்குமார், கே.சதாசிவம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

இன்று மாலையில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு ஸ்ரீகாமராஜ் கல்வி நிறுவனங்களின் மேலாண்மை அறங்காவலர் குரு.தனசேரகன் தலைமை வகித்தார். சித்த மருத்துவர் கு.சிவராமன், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் துணை இயக்குநர் முனைவர் சங்கர சரவணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சிறப்பு விருந்தினர்களாக காவல் துணைக் கண்காணிப்பாளர் பி.கோபாலச்சந்திரன், நகராட்சி ஆணையர் ஜீவா.சுப்பிரமணியன், எஸ்.வி.எஸ்.ஜெயக்குமார், அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். 

மேலும் விழாவில் மருத்துவர் எஸ்.விஜிக்குமார், அறிவியல் இயக்க முன்னாள் மாவட்டச் செயலாளர் சி.கோவிந்தசாமி, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் த.ஜீவன்ராஜ், ஆர்.நமச்சிவாயம், எஸ்.இளங்கோ ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

சந்தைப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, வெள்ளாளவிடுதி அரசு உயர்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை குட்டிமாஸ் வேதவிகாஸ் தொடக்கப்பள்ளி மாணவர்ககளின் கலை நிகழ்ச்சிகள்  நடைபெற்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

95 − 93 =