‘உச்ச நீதிமன்ற உத்தரவைவிட, அவர் என்ன உயர்ந்தவரா?’ : செயல்படாத தொலைதொடர்பு அதிகாரிக்கு நீதிபதிகள் சாட்டை

தொலைத்தொடர்புத் துறைக்கு ரூ1.47 லட்சம் கோடி செலுத்தக் கோரி பிறப்பித்த உத்தரவைச் செயல்படுத்தாத அதிகாரியையும், தொலைத்தொடர்பு நிறுவனங்களையும் கடுமையாகக் கண்டித்ததோடு மட்டுமல்லாமல், ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் காட்டமாகத் தெரிவித்தது.

அதுமட்டுமல்லாமல் நாட்டில் சட்டம் என்பதே இல்லையே, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைக் காட்டிலும் தொலைத்தொடர்புத் துறையில் டெஸ்க் அதிகாரி உயர்ந்தவரா என்று நீதிபதி அருண் மிஸ்ரா வேதனையும், கோபத்துடன் கேள்வி எழுப்பினார்

ஏஜிஆர் கட்டணம் தொடர்பாகக் கடந்த அக்டோபரில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ஏஜிஆர் எனப்படும் சரிக்கட்டப்பட்ட நிகர வருவாயில் இருந்து குறிப்பிட்ட சதவீத தொகையை ஆண்டு உரிம கட்டணமாகத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அரசுக்குச் செலுத்த வேண்டும்.

அதோடு, அந்த நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அலைக்கற்றை பயன்பாட்டுக்கான கட்டணம், ஈவுத்தொகை மற்றும் சொத்து வருமானம் உள்ளிட்டவை சரிக்கட்டப்பட்ட நிகர வருவாயாகக் கணக்கிடப்பட்டு, அதில் குறிப்பிட்ட சதவீதத்தை ஆண்டு உரிம கட்டணமாக மத்திய அரசுக்குத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இதன்படி பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் மத்திய தொலைத்தொடர்புத்துறைக்கு ரூ.1.47 லட்சம் கோடி செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தீர்ப்பளித்தது.

ஆனால், ரூ.1.47 லட்சம் கோடியைச் செலுத்துவதை மறு ஆய்வு செய்யக்கோரி வோடபோன் ஐடியா, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சார்பில் மறு ஆய்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவைக் கடந்த ஜனவரி 16-ம் தேதி நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்தது.

இதற்கிடையே தொலைத்தொடர்பு துறையின் டெஸ்க் ஆபிஸர் தொலைத்தொடர்பு நிறுவனங்களைப் பணம் செலுத்தக்கூறி அழுத்தம் கொடுக்கக்கூடாது, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை ஏதும் எடுக்கக்கூடாது என்று அட்டர்னி ஜெனரல், மற்றும் முக்கிய அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் கட்டணத்தைச் செலுத்த கூடுதல் அவகாசம் தேவை எனக் கோரி வோடபோன் ஐடியா, பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் எஸ்.அப்துல் நஸீர், எம்.ஆர். ஷா ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வேண்டாம் என்று கடிதம் எழுதிய தொலைத்தொடர்புத் துறையின் டெஸ்க் ஆபிஸரை கடுமையாகக் கண்டித்தார்கள்.

நீதிபதி அருண் மிஸ்ரா காட்டமாகக் கூறுகையில், ” உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி எப்படி தொலைத்தொடர்பு துறையின் டெஸ்க் ஆபிஸர் கடிதம் எழுத முடியும். இந்த நாட்டில் சட்டம் இருக்கிறதா?. இப்படித்தான் நீதிமன்றத்தை நடத்துவீர்களா?

இப்படிப்பட்ட முட்டாள்தனத்தை யார் செய்தார்கள் என எங்களுக்குத் தெரியாது. இவை அனைத்தையும் உருவாக்கியது யார்? நான் மிகவும் வேதனைப்படுகிறேன். இந்த நீதிமன்றத்தில், நீதிமன்ற செயல்பாட்டு முறையில் வேலை செய்யக்கூடாது என்று நான் உணர்கிறேன். நான் மனவேதனையோடு முழுப் பொறுப்புணர்வுடன் இதைக் கூறுகிறேன்.

இந்த விஷயத்தில் நான் ஆத்திரப்படவில்லை, கோபப்படவில்லை. ஆனால், இந்த நாட்டில் இந்த செயல்முறையில் எவ்வாறு செயல்படுவது என்பதை நினைத்துச் சோர்வடைந்துவிட்டேன்” எனத் தெரிவித்தார்.

அப்போது சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா குறுக்கிட்டு தொலைத்தொடர்பு துறையின் டெஸ்க் ஆபிஸர் செயல்பாட்டுக்கு மன்னிப்பு கோரி, அவ்வாறு செய்திருக்கக் கூடாது என்று தெரிவித்தார்

அப்போது நீதிபதிகள் அமர்வு கூறுகையில், ” நாட்டின் சொலிசிட்டர் ஜெனராலாகிய நீங்கள், டெஸ்க் ஆபிஸர் பிறப்பித்த உத்தரவைத் திரும்பப் பெறச் சொல்லலாமே. இதை நாங்கள் பொறுத்துக்கொள்ள முடியாது. இதுபோன்று எங்களால் செயல்படமுடியாது.

உங்களின் டெஸ்க் ஆபிஸருக்கு இதுபோன்ற துணிச்சலான முடிவுகள் எடுக்கும் வலிமை இருந்தால், உச்ச நீதிமன்றத்தை மூடிவிடுங்கள். ஏராளமான செய்திகள் வெளியாகி இருக்கின்றன, இதற்கு யார் ஸ்பான்ஸர் செய்தது” எனத் தெரிவித்தனர்

நீதிபதி அருண் மிஸ்ரா பேசுகையில், ” என்னைப் பற்றி நான் ஒருபோதும் கவலைப்படுவதில்லை. என்னை நீங்கள் ஒரு இஞ்ச் கூட புரிந்துகொள்ளவில்லை, உங்களின் டெஸ்க் ஆபிஸர் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையே நிறுத்த முயல்கிறார். அவர் என்ன உச்ச நீதிமன்றத்தைவிட உயர்ந்தவரா?, எப்படி உயர்ந்தவராகிவிட முடியும். இந்த நாட்டில் அவர் வாழ்வதைக் காட்டிலும், அவரை எங்காவது சென்றுவிடக் கூறுங்கள்.

அந்த டெஸ்ட் ஆபிஸருக்கு எதிராகவும், அந்த நிறுவனங்களுக்கு எதிராகவும் அவமதிப்பு நோட்டீஸ் அளிக்கப் போகிறோம். அவர்கள் அவ்வாறு நடந்து கொண்டார்கள். அந்த நிறுவனங்கள் ஒரு பைசா கூட செலுத்தாமல் தீர்ப்பை மறுஆய்வு செய்க்கோருகிறார்கள், அதனால் மனுவைத் தள்ளுபடி செய்தோம். ஆனால், எங்கள் உத்தரவை டெஸ்க் ஆபிஸர் நிறுத்தி வைக்கிறார். இந்த தேசத்தின் நீதிமன்றத்தின், நீதி பரிபாலனத்தின் ஆரோக்கியத்தைக் காக்க விரும்புகிறோம்” எனத் தெரிவித்தார்

அப்போது துஷார் மேத்தா குறுக்கிட்டு, ” எந்த விதமான நடவடிக்கையும் இப்போது எடுக்கக்கூடாது, டெஸ்க் ஆபிஸரிடம் இருந்து விளக்கக் கடிதம் கேட்கிறேன்” எனத் தெரிவித்தார்

அதற்கு நீதிபதிகள் அமர்வு, ” வரும் மார்ச் 17-ம் தேதி அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மேலாண் இயக்குனர்கள், இயக்குனர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி, பணத்தை இன்னும் டெபாசிட் செய்யாததற்குக் காரணத்தை விளக்க வேண்டும், ஏன் கடுமையான நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்கும் காரணம் கூற வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் தொலைத்தொடர்பு டெஸ்க் ஆபிஸர் ஏன் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும். நாட்டில் உள்ள அதிகாரிகளுக்கு எது வரைமுறை என்பதைக் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும்” என உத்தரவிட்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 + 3 =