டி20: 5 ரன்களுக்கு 4 விக்கெட் ; இங்கிடி பந்துவீச்சில் தெ.ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி – கோட்டை விட்ட இங்கி.

வேகப்பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடியின் அற்புதமான பந்துவீச்சில் ஈஸ்ட் லண்டன் நகரில் நடந்த முதலாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது தென் ஆப்பிரிக்க அணி.

முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் சேர்த்தது. 178 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்து ஒரு ரன்னில் தோல்வி அடைந்தது.

4 ஓவர்கள் வீசி 30 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிடி ஆட்ட நாயகன் விருது பெற்றார். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா முன்னிலை பெற்றுள்ளது.

ஒரு கட்டத்தில் 36 பந்துகளுக்கு இங்கிலாந்து அணி வெற்றிக்கு 50 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 8 விக்கெட்டுகள் இருந்தன. ஆனால், இங்கிலாந்து வீரர் ஜேஸன் ராய் ஆட்டமிழந்தபின் பெரிய திருப்புமுனை ஏற்பட்டு ஆட்டம் தென் ஆப்பிரிக்காவின் பக்கம் திரும்பியது.

132 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்த இங்கிலாந்து அணி அடுத்த 44 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. அதிலும் கடைசி 5 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைப் பதற்றத்தில் இழந்து வெற்றியைப் பரிதாபமாகப் பறிகொடுத்தது.

அதிலும் கடைசி ஓவரை லுங்கி இங்கிடி வீசி தென் ஆப்பிரிக்க அணிக்கு வெற்றியைத் தேடித்தர முக்கியக் காரணமாக இருந்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 4 விக்கெட்டுகள் இருந்தன.

களத்தில் மொயின் அலி, டாம்கரன் இருந்தனர். இங்கிடி வீசிய முதல் பந்தில் கரன் 2 ரன்கள் எடுத்தார். 2-வது பந்தில் மில்லரிடம் கேட்ச் கொடுத்து டாம் கரன் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து இரு பந்துகளைச் சந்தித்த மொயின் அலி, 5-வது பந்தில் போல்டாகி 5 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த ரஷித் ரன் அவுட்டாக, இங்கிலாந்து அணி ஒரு ரன்னில் தோல்வி அடைந்தது.

12 பந்துகளுக்கு 23 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஹென்ரிக்ஸ் வீசிய 19-வது ஓவரில் மோர்கன் இரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 14 ரன்கள் விளாசி அணியை வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஆனால், அதே ஓவரின் கடைசிப் பந்தில் ஆட்டமிழந்து 52 ரன்களில் வெளியேறினார். மோர்கன் ஆட்டமிழந்தவுடனே இங்கிலாந்து அணியின் ஆட்டத்தையும், வெற்றியையும் இங்கிடி கையில் எடுத்துக்கொண்டார்.

ஆட்டம் சூப்பர் ஓவரை நோக்கிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இங்கிடி சாதுர்யமாக வீசிய கடைசி ஓவர்தான் தென் ஆப்பிரிக்க அணியைக் காத்தது.

இங்கிலாந்து அணியில் ஜேஸன் ராய் 38 பந்துகளில் 3 சிக்ஸர், 7 பவுண்டரி உள்பட 70 ரன்களில் ஆட்டமிழந்தார். பேர்ஸ்டோ 23, பட்லர் 15 ரன்களில் ஆட்டமிழந்தனர். நடுவரிசையில் களமிறங்கிய டென்லி (3), ஸ்டோக்ஸ் (4), மொயின் அலி (5),கரன் (2), ரஷித் (1) ஆகியோர் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தது தோல்விக்குக் காரணமாகும்.

தென் ஆப்பிரிக்கத் தரப்பில் இங்கிடி 3 விக்கெட்டுகளையும், பெகுல்க்யோ, ஹென்ரிக்ஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

முன்னதாக, டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. குயின்டன் டீ காக், பவுமா முதல் விக்கெட்டுக்கு 48 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். டீகாக் 31 ரன்னில் ஆட்டமிழந்தார்.

2-வது விக்கெட்டுக்கு வான் டெர் டூசென், பவுமா 63 ரன்கள் சேர்த்தனர். டூசென் 31 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த மில்லர் (16), முட்ஸ் (2), பெகுல்க்யோ (18) ரன்கள் சேர்த்தனர்.

இங்கிலாந்து தரப்பில் ஜோர்டன் 2 விக்கெட்டுகளையும், மொயின் அலி, கரன், ஸ்டோக்ஸ், ரஷித், மார்க் வுட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 41 = 44