புதுடில்லி: டில்லி சட்டசபைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 70 எம்.எல்.ஏ.க்களில் 37 பேர் மீது கொலை முயற்சி பாலியல் பலாத்காரம் உட்பட பல்வேறு தீவிரமான குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பது ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.
டில்லியை சேர்ந்த ஜனநாயக சீர்திருத்தத்திற்கான சங்கம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் டில்லி சட்டசபை தேர்தலின் போது ஆய்வுப் பணிகளை மேற்கொண்டது. ஆய்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

அதில் கூறியிருப்பதாவது: டில்லி சட்டசபைக்கு தேர்வாகி உள்ள 70 எம்.எல்.ஏ.க்களில் 37 பேர் மீது தீவிர குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களில் 13 பேர் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவர் மீது பாலியல் பலாத்கார வழக்கு உள்ளது.மேலும் கொலை முயற்சி வழக்கு கூட பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 45 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பா.ஜ.வை சேர்ந்த ஏழு எம்.எல்.ஏ.க்களுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சொத்து உள்ளது. ஒரு எம்.எல்.ஏ.வின் சராசரி சொத்து மதிப்பு 14.29 கோடி ரூபாய் என தகவல் வெளியாகி உள்ளது.