‘கோவிட் – 19’ ஆக மாறிய, ‘கொரோனா’ வைரஸ்

பீஜிங்: நமது அண்டை நாடான சீனாவில், ‘கோவிட் – 19’ வைரஸ் தாக்கியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 1,113ஆக உயர்ந்தது. அதே நேரத்தில், இந்த வைரஸ் பாதிப்பு, 44,653 பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில், கடந்தாண்டு டிசம்பரில் இருந்து, ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பு பரவி வருகிறது. நேற்று முன்தினம் மட்டும், சீனாவில், இந்த வைரஸ் பாதிப்பால், 97 பேர் உயிரிழந்தனர். அதையடுத்து, பலியானோர் எண்ணிக்கை, 1,113 ஆக உயர்ந்தது. மேலும், ஒரே நாளில், 2,015 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர்களையும் சேர்த்து, 44 ஆயிரத்து, 653 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த கொரோனா வைரசுக்கு, உலக சுகாதார அமைப்பு, ‘கோவிட் – 19’ என, அதிகாரப்பூர்வமாக பெயர் வைத்துள்ளது. இதில் சி.ஓ., என்பது கொரோனாவின் முதல் இரண்டு எழுத்துக்களை குறிக்கிறது. வி.ஐ., என்பது, வைரசின் முதல் இரண்டு எழுத்துக்களையும், கடைசியாக உள்ள, ‘டி’ என்பது, ‘டிசீஸ்’ எனப்படும் வியாதியை குறிப்பிடுகிறது. இந்த வைரஸ், கடந்தாண்டு பரவ ஆரம்பித்ததால், 19 சேர்க்கப்பட்டுள்ளது.ஆளுங்கட்சிக்கு நெருக்கடிசீனாவில், ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி, கடும் நெருக்கடியில் உள்ளது. வைரஸ் பாதிப்பு பரவி வருவதால், சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என, மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இதனால், அதிபர் ஸீ ஜின்பிங்கின் பதவிக்கு எந்த பாதிப்பு ஏற்படாது. அதே நேரத்தில், மக்களிடையே அவருடைய செல்வாக்கு சரிவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும், அரசின் பொருளாதார மற்றும் சமூக நலத் திட்டங்களுக்கு ஒப்புதல் தரும், கட்சியின் தேசிய மாநாடு நடத்தப்படும். இந்தாண்டு, மார்ச், 5ல், இந்த மாநாடு நடத்தப்படுவதாக இருந்தது. இதில், நாடு முழுவதிலும் இருந்து, கட்சியின், 3,000க்கும் மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்பதாக இருந்தது.தற்போது மக்கள் அதிருப்தியில் உள்ளதால், இந்த மாநாட்டை ரத்து செய்ய, சீன கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளதாக, செய்திகள் தெரிவிக்கின்றன.கப்பல் பயணியர்வைரஸ் பாதிப்பு உள்ளவர் பயணித்ததாக, ஆசிய நாடான ஜப்பான் அருகே, கடல் பகுதியில், ‘டயமண்ட் பிரின்சஸ்’ என்ற சொகுசு கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.மொத்தம், 3,711 பேர் உள்ள இந்த கப்பலில், ஏற்கனவே, 135 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், மேலும், 53 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 39 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், இருவர் இந்தியர். அதையடுத்து, வைரஸ் பாதிப்பு உள்ளோரின் எண்ணிக்கை, 174 ஆக உயர்ந்தது.ரஷ்யாவில், இந்த வைரஸ் பாதிப்பு இரண்டு பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.அதில், ஒருவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இந்த நிலையில், சைபீரியாவில் சிகிச்சை பெற்று வந்த மற்றொருவரும், நேற்று வீடு திரும்பினார்.செல்போன் பாதிப்புசீனாவில் வைரஸ் பாதிப்பால், பல ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், உதிரி பாகங்கள் மற்றும் மற்ற சாதனங்கள் கிடைக்காததால், செல்போன் தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக, ஐ.சி.இ.ஏ., எனப்படும் இந்திய செல்போன் மற்றும் மின்னணு சாதனங்கள் சங்கம் கூறியுள்ளது.ஆசிய நாடான சிங்கப்பூரில், ஏற்கனவே, 47 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உள்ளது.

இந்த நிலையில், சிங்கப்பூரில் உள்ள, டி.பி.எஸ்., வங்கி ஊழியர் ஒருவருக்கு, வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து, வங்கி மூடப்பட்டுள்ளது. அதில் பணியாற்றும், 300 ஊழியர்களை, வீடுகளில் இருந்து செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.பயத்தில் தற்கொலை!ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டத்தை, சேர்ந்தவர் பாலகிருஷ்ணா, 50. இதய துடிப்பு அதிகரித்ததால், திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனையில், ரத்தப் பரிசோதனை செய்து கொண்டார். அவருக்கு வைரஸ் தொற்று இருப்பதாக டாக்டர்கள் கூறினர்.

அதனால், 2 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டு சொந்த கிராமத்திற்கு சென்றார்.வீட்டிற்கு வந்தவர், தன்னை, ‘கொரோனா’ வைரஸ் தாக்கிவிட்டதாகவும், தன் அருகில் யாரும் வரவேண்டாம் என்றும் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். அதை மீறி அவர் அருகில் சென்றவர்கள் மீது, கற்களை வீசி தாக்கினார். குடும்பத்தினர் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். ஆனால், அவர்கள் அதை கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலையில், கொரோனா பயத்தில், தன்னுடைய நிலத்தில் உள்ள மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சாதாரண வைரஸ் தொற்றை, கொரோனா தொற்று என பயந்து, அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 2 =