கொரோனா வைரஸ் : தவறாகப் புரிந்து கொண்ட விவசாயி தற்கொலை

ஆந்திராவில் விவசாயி ஒருவர் தனக்கு கொரோனா தாக்கம் ஏற்பட்டுவிட்டதாகக் கருதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கொரோனா வைரஸ்’ பாதிப்பால். சீனா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பரவலைத் தடுக்கவும் நோய்க்கான எதிர்ப்பு மருந்து கண்டுபிடிக்கும் வேலைகளிலும் சீன அரசு  தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்தநிலையில், ஆந்திராவைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டதாகத் தவறாக எண்ணி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சித்தூரை அடுத்த தொட்டம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் 54 வயதான பாலகிருஷ்ணையா. விவசாயியான இவருக்கு, பிப்ரவரி 1-ம் தேதி முதல் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பிப்ரவரி 5-ம் தேதி மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்குப் பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. சிறுநீரகத் தொற்று காரணமாக பாலகிருஷ்ணையாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் கண்டறிந்தனர். அதற்கான மருந்து மாத்திரைகளையும் மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். மேலும், நோய்த் தொற்று மற்றவர்களுக்கு பரவாமல் இருப்பதற்காக  முகக் கவசம் அணிந்துகொள்ள அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து, திருப்பதியில் உள்ள தன் தங்கை வீட்டுக்குச் சென்று இரண்டு நாள்கள் தங்கியுள்ளார்.

இந்த நிலையில், சீனாவில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் குறித்த செய்திகளை நாளிதழ்கள் மற்றும் டிவி வாயிலாக தெரிந்துகொண்ட பாலகிருஷ்ணையா, தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுவிட்டதாக தவறாக எண்ணியுள்ளார். தன் குடும்பத்தினரையும் கிராம மக்களையும் சந்திப்பதைத் தவிர்த்து வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தன்னால் கொரோனா வைரஸ் பரவி விடக் கூடாது என எண்ணி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நேற்று காலை அவரது வீட்டை வெளிப்பக்கமாக தாழிட்டுவிட்டு அருகில் இருந்த மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இரவு தூங்கச் சென்ற பாலகிருஷ்ணையா, காலையில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததைப் பார்த்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 7 = 1