காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு வரும் பட்ஜெட்டிலேயே நிதி ஒதுக்கீடு செய்யப்படும் : அமைச்சர் விஜயபாஸ்கர்

காவிரி&-வைகை-&குண்டாறு  இணைப்பு திட்டத்திற்கு நடப்பு ஆண்டிலேயே எதிர்வரும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தெரிவித்தார்.

காவிரி-வைகை-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதற்கு  தமிழக முதல்வர், துணை முதல்வர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆகியோருக்கு புதுக்கோட்டை மாவட்ட அனைத்து விவசாயிகளின் சார்பில் நன்றி தெரிவிக்கும் கூட்டம் புதுக்கோட்டை நகர்மன்றத்தில்  இன்று மாலை நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:-

புதுக்கோட்டை மாவட்ட மக்களின் 100 ஆண்டு கால கனவுத்திட்டம் காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத்திட்டமாகும். வரலாற்று சிறப்பு மிக்க இத்திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.7,677 கோடி ஆகும். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 12 தாலுக்காக்களில்  உள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் இதன் மூலம் பயனடைய உள்ளன..

மேலும் இத்திட்டத்தால் காவிரி முதல் தெற்கு வெள்ளாறு வரை 119 கிலோ மீட்டர் தூரத்திற்கு கால்வாய் அமைத்து அதில் பெறப்படும் உபரி நீர் வினாடிக்கு 6,360 கன அடி வீதம் கொண்டு வரப்பட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 760 கண்மாய்களுக்கு நீர் ஆதாரம் பெறுவதுடன், 20,249.26 ஹெக்டேர் இதன் பயனாக விவசாய நிலங்கள் பாசன வசதி பெற உள்ளது.

ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொது மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு பொது மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்பொழுது காவிரி ஆறு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கொண்டு வரப்படுவதால் விவசாயம் செழித்து பொருளாதார முன்னேற்றம் ஏற்பட வழிவகை ஏற்பட்டுள்ளது. மேலும் மற்றொரு முக்கிய நிகழ்வாக காவிரியில் கோதாவரி இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படும் பொழுது புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருடம் முழுவதும் காவிரி வருவது உறுதி செய்யப்பட்டு முப்போகம் விளைச்சல் மேற்கொண்டு புதுக்கோட்டை செழிக்கும்.

மேலும் காவிரி-&வைகை-&குண்டாறு இணைப்புத் திட்டத்தை அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், 9ஏ நத்தம் பண்ணை ஊராட்சி மற்றும் கவிநாடு மேற்கு ஊராட்சியில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இங்கு வழங்கப்பட்டுள்ளது.

காவிரி-&வைகை&-குண்டாறு இணைப்புத்திட்டத்தில் மற்றும் ஒரு மைல் கல்லாக நாளை நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே தமிழக முதல்வர் மற்றும் தமிழக துணை முதல்வர் ஆகியோரால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் பேசினார்.

இந்நிகழ்வில், மாவட்ட கலெக்டர் பி.உமாமகேஸ்வரி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தலைவர் பி.கே.வைரமுத்து, அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் பா.ஆறுமுகம் , மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் இரா.சின்னதம்பி, புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் ஜெயலெட்சுமி தமிழ்ச்செல்வன், வர்த்தக சங்க நிர்வாகிகள் சீனு சின்னப்பா, சம்பத்குமார், கவிஞர் தங்கம் மூர்த்தி,இந்திய விவசாய சங்க மாநில பொது செயலாளர் ஜி.எஸ்.தனபதி உள்ளிட்ட விவசாய சங்க பிரதிநிதிகள், அனைத்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

39 − = 34