ஏழு பேரை விடுதலை செய்ய அதிகாரம் இல்லை : உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் எழுவர் விடுதலை குறித்து பரிந்துரை மட்டுமே செய்யப்பட்டுள்ளது என்றும், அவர்களை விடுதலை செய்ய அதிகாரம் இல்லை என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018 செப்டம்பர் 9ஆம் தேதி தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி, 2018 செப்டம்பர் 11ஆம் தேதி ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இந்த பரிந்துரை மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காததால், தீர்மானம் நிறைவேற்றிய மறுநாள் முதல் தன்னை சட்டவிரோதமாக சிறையில் அடைத்து வைத்திருக்கபட்டதாகவும், தன்னை விடுதலை செய்ய வேண்டுமெனவும் கூறி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஆர்.பொங்கியப்பன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், தற்போது முன்கூட்டி விடுதலை செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்யவில்லை என்றும், 7 பேரை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றிய பிறகு நியாயமற்ற முறையிலும், சட்டவிரோதமாகவும் சிறையில் அடைத்துள்ளதால் தங்கள் தரப்பில் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததுதான் என வாதிட்டார்.

மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அமைச்சரவையின் பரிந்துரைக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டுமென்றும், தீர்மானம் நிறைவேற்றிய பிறகு ஒவ்வொரு நாளும் சட்டவிரோதமாகவே நளினி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக வாதிட்டார்.

அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை தொடர்ந்து மாநில அரசு நளினி உட்பட 7 பேரின் விடுதலை தொடர்பாக 2018 செப்டம்பரில் தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு பரிந்துரை அனுப்பியது என்றும், அமைச்சரவை பரிந்துரைந்த்தாலும் அதுதொடர்பாக எந்த உத்தரவையும் அரசு பிறப்பிக்கவில்லை என தெரிவித்தார்.

மேலும், ஆளுநருக்கு அனுப்பிய தீர்மானம் என்பது பரிந்துரை மட்டுமே என்றும், எந்த உத்தரவையும் பிறப்பிக்க அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

இதையடுத்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு நளினி சட்டப்பூர்வ காவலில் இருக்கிறாரா அல்லது சட்டவிரோத காவலில் இருக்கிறாரா என்பது குறித்து தெளிவுபடுத்த அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை பிப்ரவரி 18ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + 8 =