நம்பர் பிளேட்டுகளை இரவிலும் படமெடுக்கும் துல்லிய கேமராக்கள் – அதிரடி காட்டும் சென்னை காவல்துறை!

சாலைகளில் செல்லும் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளைப் படமெடுக்கும் அதிநவீன கேமராக்கள் சென்னையில் பொருத்தப்பட்டுள்ளன.

சென்னையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக மூன்றாம் கண் என்ற திட்டத்தின் மூலம் சிசிடிவி கேமராக்கள் அதிக அளவில் பொருத்தப்பட்டு வருகின்றன. சென்னையில் சிறிய தெருக்கள்கூட கேமராவின் கண்காணிப்பில் இருக்கும் நிலை உருவாகி இருக்கிறது. இந்நிலையில் அடுத்தக்கட்டமாக வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளைப் படமெடுக்கும் அதிநவீன கேமராக்கள் ( Automatic Number Plate Recognition) சென்னையில் பொருத்தப்பட்டு வருகின்றன.

இந்த அதிநவீன கேமராக்கள் சென்னையின் சில பகுதிகளில் ஏற்கெனவே பொருத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது நந்தனம் சந்திப்பு, ஹால்டா சந்திப்பு, டைடல் பார்க் சந்திப்பு ஆகிய இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் சாலைகளில் செல்லும் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளை துல்லியமாக படம் எடுத்து, கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைக்கும்.

இந்த கேமராக்கள் பல வடிவ எண் ஸ்டைல்களையும் எளிதாக ஸ்கேன் செய்து படமெடுக்கும். மிகத் துல்லியமாக படமெடுக்கும் வசதி என்பதால், வாகனத்தின் தெளிவான புகைப்படத்தை எடுக்கிறது. இந்த புகைப்படத்தை வைத்து ஓட்டுநர்களின் அடையாளங்களைக் கூட கண்டுபிடிக்கலாம் எனக் கூறப்படுகிறது. வாகனம் சாலையைக் கடக்கும் நேரம், இடம் என அனைத்தும் உடனடியாக சேமிக்கப்படுகின்றன. காணாமல் போகும் வாகனங்களின் தகவல்களை கட்டுப்பாட்டு அறை மூலம் பதிவிட்டால், இந்த அதிநவீன கேமராக்கள் மூலம் எளிதாக அடையாளம் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவிலும் தெளிவாக படமெடுக்கும் வசதி என்பதால் 24 மணி நேர கண்காணிப்பை இந்த நவீன கேமராக்கள் உறுதி செய்கின்றன.

குறிப்பிட்ட எண் கொண்ட வாகனத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்றால், அந்த வாகனத்தின் எண்ணை கட்டுப்பாட்டு அறைமூலம் பதிவிட்டால் போதும். சென்னையின் எந்த இடத்தில் அந்த வாகனத்தை கண்டாலும், கேமரா படமெடுத்து உடனடி அலெர்ட்டை வழங்கிவிடும். போலீசாரின் வாகன தணிக்கைக்கு நிற்காமல் அதிவேகமாக செல்லும் வாகனங்களை அடையாளம் காணுதல், விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிக்கும் வாகனங்களை அடையாளம் காணுதல், தேடப்படும் வாகனங்களை கண்டுபிடித்தல் என பல்வேறு தேவைகளில் இந்த கேமராக்கள் பெரும் பங்காற்றுகின்றன.

இது குறித்து பேசிய சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், ”சென்னைக்குள் ஒரு வாகனம் நுழைந்துவிட்டால் அந்த வாகனம் போலீசாரின் கண்காணிப்பில் சிக்காமல் வெளியே செல்லமுடியாத நிலை உருவாகி இருக்கிறது. விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்செல்லும் வாகனங்கள் 76% கண்டுபிடிக்கப்படுகின்றன” எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

76 + = 79