வெயிலுக்கு நார்த்தம்பழ ஜூஸ்..! பசிக்கு களத்து தோசை..! விவசாயிகளை அரவணைக்கும் வேப்பங்குளம் கிராமம்..!

தங்களுடைய கிராமத்தில் அமைந்துள்ள நெல்கொள்முதல் நிலையத்தில் வெயிலாலும், பசியாலும் வாடிவதங்கும் விவசாயிகளுக்கு இலவசமாகப்  பழ ரசமும், மிகக் குறைந்த விலையில் ‘களத்து தோசையும் செய்து கொடுத்து விவசாயிகளை அன்புடன் அரவணைத்து அசத்துகிறது வேப்பங்குளம் கிராமம்.!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு அருகாமையில் உள்ள கல்லல் ஒன்றியத்துக்கு உட்பட்டது வேப்பகுளம் கிராமம். இந்த வேப்பங்குளம் ,இரண்டு மூன்று ஆண்டுகளாய் தண்ணீர் மேலாண்மையில் தன்னிறைவு பெற்ற ஊர். ஒட்டுமொத்த கிராமத்தின் கூட்டு முயற்சி, நீர்நிலைகளை நிரம்ப வைத்து வருகிறது. இதனால் விளைச்சலுக்குப் பஞ்சமில்லை.

நடப்பு சாகுபடியின் நெல் அறுவடை கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. ஆனால் நெல்லுக்குத்தான் போதிய விலை இல்லை. இருந்தும், நெல்லை விற்றால்தான் விவசாயத்திற்கு வாங்கிய கடன்களை  விவசாயிகளால் அடைக்க முடியும். இதனால் வியாபாரிகள் நிரணயித்த விலைக்கே, நெல்லை அடிமாட்டு விலைக்கு விற்க வேண்டிய சூழல் உள்ளது. இதற்கும் ஒரு தீர்வு காண இக்கிராமத்தினர் முன்வந்தனர். அதாவது அவசரத்திற்கு இப்போதே நெல்லை விற்க வேண்டிய சூழ்நிலையில் உள்ள விவசாயிகளின் நெல்லை அந்தக் கிராமத்தினரே வியாபாரிகளைவிட கூடுதல் விலைக்கு வாங்குவது.; அப்படி கொள்முதல் செய்த நெல்லை அரிசியாக மதிப்புக்கூட்டி விற்பனை செய்வது எனத் திட்டமிட்டுள்ளனர். அதற்காக அப்படித் தயாரிக்கப்படும் அரிசிக்கு தங்களின் கிராமப் பெயரான ‘ ‘வேப்பங்குளம்’ என்று ‘பிராண்டு’ பெயர்  சூட்டவும் முடிவு செய்துள்ளனர்.

நெல்லை விற்கும் விவசாயிகளுக்கு உடனடியாக கொடுப்பதற்கு பணம் தேவை என்பதால் இதுபற்றி சமூக ஊடகங்களில் இக்கிராமத்தினர் அறிவிப்புக் கொடுத்தனர். அதன்படி அரிசி தேவைப்படுவோர் முன்கூட்டியே பணம் செலுத்தினால் 30 முதல் 45 நாட்களில் அரிசி தரப்படும். அதற்கான முன்பணத்தைச் செலுத்துமாறும், வேண்டுகோள் விடுத்தனர். அதற்கு நுகர்வோரிடமிருந்தும் நல்ல வரவேற்புக் கிடைத்தது. அப்படிக் கிடைத்த பணத்தை வைத்து இதுவரை 300 மூட்டை நெல்லை கொள்முதல் செய்துள்ளனர்.  கொள்முதல் செய்த நெல்லை  அரிசி ஆக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதனை ஒரு பரிசோதனை முயற்சியாக இக்கிராமத்தினர் செய்கிறார்கள். இதில் கிடைக்கும் வரவு செலவினை வைத்து வரும் ஆண்டுகளில் இத்திட்டத்தை விரிவாகச் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

இக்கிராமத்தினர் அரசுக்கு வைத்த தொடர் கோரிக்கையை அடுத்து நேரடி நெல் கொள்முதல் நிலையம் பிப்ரவரி-7 ஆம் தேதி முதல் வேப்பங்குளத்தில் செயல்படத் துவங்கி உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு ஓரளவு கட்டுபடியான விலை நெல்லுக்கு கிடைத்து வருகிறது.. நேரடி கொள்முதல் நிலையத்திற்கு தினசரி 300 முதல் 400  மூட்டைகள் நெல்வரத்து உள்ளன. நெல்கொள்முதல் நிலையத்திற்கு தினமும் 10 முதல் 20 விவசாயிகள் வந்து செல்கின்றனர். மேலும் நெல்லை எடை வைத்து பேக்கிங் செய்யும் செய்யும் பணியில் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும்  ஈடுபட்டுள்ளனர்.

வெயில் இப்பொழுதே கடுமையாக தலைகாட்டத் தொடங்கி  இருக்கிறது. இதனால் நேரடி நெல்கொள்முதல் மையத்தில் வேலை செய்யும் பணியாளர்களும், அங்கு வந்து நெல் மூடைகளை இறக்கி வைக்கும் விவசாயிகளும் மிகுந்த சோர்வும், களைப்பும் அடைந்துவிடுகின்றனர், இவர்களின் சோர்வினை போக்கும்விதமாக வேப்பங்குளம் கிராமத்தில் விளையும் நார்த்தம் பழங்களைக் கொண்டு   எடை வைக்கும் பணியாளர்களுக்கும், நெல்லினை கொண்டு வரும் அனைத்து விவசாயிகளுக்கும் தினசரி நார்த்தம் பழ ஜூஸ் இலவசமாகக் கிராமத்தின் சார்பில் வழங்கப்படுகிறது.  இதனால் அங்கு பணிபுரியும் பணியாளர்களும், வந்து செல்லும் விவசாயிகளும் மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்து வருகின்றனர். இதற்கு காரணமான வேப்பங்குளம் கிராமத்தினரை மனதாரப் பாராட்டிச் செல்கின்றனர்.

அதேபோல் அவர்களின் பசியினைப் போக்கவும் குறைந்த விலையில் ‘களத்து தோசை’ என்ற பலகாரத்தையும் கிராமத்தின் ஏற்பாட்டில் தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர், ‘களத்து தோசை என்பது’ செட்டிநாட்டுப் பகுதியில் ஒரு காலத்தில் மிகப்பிரபலமான பலகார வகை. ஆனால்,நவீன உலகின் அதிவேக ஓட்டம் பல பழமைகளையும் பாரம்பரியங்களையும் காலில் போட்டு மிதித்து  ஓடுவதில் இந்த களத்து தோசையும் காணாமல்போன பட்டியலில் சேர்ந்துவிட்டது. இந்த களத்து தோசைக்கு ‘இரட்டை தோசை’ என்றும் பெயர். இவ்வளவு ருசிமிக்க இந்த களத்து தோசைக்கு மீண்டும் களத்தில் இருந்தே உயிர் கொடுத்திருக்கிறது வேப்பங்குளம் கிராமம்.

வேப்பங்குளத்தில் செயல்படும் நேரடி நெல்கொள்முதல் நிலையத்துக்கு வரும் விவசாயிகளின் பசியினைப் போக்க அருகிலேயே சுடச்சுட  தயாரிக்கப்படும் ‘இந்த ‘களத்து தோசை’ காத்திருக்கிறது. இந்தக் களத்து தோசையை ஒருவர் 2 தோசைகள் சாப்பிட்டாலே போதுமானது. இந்த தோசையில் உளுந்து, அரிசி மாவு, நாட்டுச் சர்க்கரை, ஏலம் சுக்கு போன்றவை கலந்திருப்பதால் களத்து தோசை அலாதி சுவையுடன் இருக்கிறது. ஒரு தோசையை வேகவைத்து அதன்மேல் நாட்டுச் சர்க்கரை, ஏலம் சுக்கு, ஆகியவை போட்டு அதன்மேல் இன்னொரு தோசை ஊற்றப்படுகிறது.  ருசியுடன் உடலுக்கு வலுவான சத்துகளும் இந்த தோசையில் அடங்கி இருக்கிறது.

களத்து தோசைக்கான காரணப் பெயரினை ஆராய்ந்தால், களம் என்றால் நெல் களம். நெல் மணிகள் அறுவடை ஆகும் காலத்தில்,நெற்களத்திலும்,  தெருக்களிலும் கூவிக்கூவி இந்த களத்து தோசை விற்பனை செய்யப்படும். இதனை சில வீடுகளிலும் செய்து சாப்பிடுவார்கள். நெற்களங்களுக்கே நேரடியாகச் சென்று தோசை விற்பவர்கள் தோசைக்கு மாற்றாக நெல்லை வாங்கிச் செல்வார்கள். இது ஒருவித பண்டமாற்றுமுறையாக இருந்திருக்கிறது.

இவ்வளவு சுவாரஸ்யப் பின்னணி கொண்ட இந்த ‘களத்து தோசையை’ இங்கு வரும் விவசாயிகள் வயிறாரவும், ருசியுடனும் உண்டு மகிழ்கின்றனர். அத்துடன் மிகக்குறைந்த விலையில்,, நெல்கொள்முதல் மையத்துக்கு அருகிலேயே கிடைப்பதால், சாப்பாட்டைத் தேடி அலைய வேண்டியதில்லை.அத்துடன் பல்லாண்டுகளாய்க் காணாமல்போன களத்து தோசையை, அதுவும் இந்த நெல் களத்தில் இருந்தே சுடச்சுட மிகுந்த சுவையுடன் சாப்பிடுவது விவசாயிகளுக்கு கூடுதல் மகிழ்ச்சியைத் தருகிறது; விவசாயிகளின்மீது அன்பும், அக்கறையும் கொண்டு இதனை ஏற்பாடு செய்துள்ள வேப்பங்குளம் கிராமத்தினருக்கு மனமும் வயிறும் நிறைய நன்றி சொல்லிவிட்டுப் போகிறார்கள் இங்கு வந்து செல்லும் விவசாயிகள்.

 -பழ.அசோக்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + 5 =