5வது முறையாக ஜூனியர் உலக கோப்பையை வெல்லுமா இந்தியா? – எதிர்பார்ப்பில் ரசிகர்கள் தவிப்பு

13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) கடந்த மாதம் 17-ம் தேதி தென்ஆப்பிரிக்காவில் தொடங்கியது.
மொத்தம் 16 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றுகள் முடிவில் ஆசிய அணிகளான நடப்பு சாம்பியன் இந்தியாவும், வங்காளதேசமும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.
இந்நிலையில், போட்செப்ஸ்ட்ரூமில் இன்று இறுதி ஆட்டம் நடைபெற உள்ளது. இதில் இந்தியா-வங்காளதேச அணிகள் மோத உள்ளன. நடப்பு தொடரில் இவ்விரு அணிகளும் தோல்வியே சந்திக்காமல் இந்த நிலையை எட்டியுள்ளன.
பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் வலுமிக்கதாக விளங்கும் பிரியம் கார்க் தலைமையிலான இந்தியாவுக்கே கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டு உள்ளது. அரைஇறுதியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பந்தாடியது இந்தியாவின் நம்பிக்கைக்கு தீனி போட்டுள்ளது.
இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்தவராக வலம் வரும் தொடக்க ஆட்டக்காரர் யஷாஸ்வி ஜெய்ஸ்வால் (ஒரு சதம், 3 அரைசதம் உள்பட 312 ரன்), திவ்யான்ஷ் சக்சேனா (2 அரைசதத்துடன் 148 ரன்), கேப்டன் பிரியம் கார்க் ஆகியோரைத் தான் இந்திய அணி பேட்டிங்கில் அதிகமாக சார்ந்து இருக்கிறது. குறிப்பாக நமக்கு தொடக்கம் நேர்த்தியாக அமைந்து விட்டால், எதிரணிக்கு உதறல் தானாகவே வந்துவிடும்.
இதேபோல் பந்துவீச்சில் சுழற்பந்து வீச்சாளர் ரவிபிஷ்னோய் (13 விக்கெட்), வேகப்பந்து வீச்சாளர்கள் கார்த்திக் தியாகி (11 விக்கெட்), ஆகாஷ் சிங் (7 விக்கெட்) ஆகியோர் கலக்குகிறார்கள். ஓவருக்கு சராசரியாக 4-க்கும் குறைவான ரன்களை விட்டுக்கொடுத்து சிக்கனத்தை காட்டியுள்ள இவர்கள் இறுதி ஆட்டத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
ஏற்கனவே 4 முறை இந்த கோப்பையை வென்றுள்ள இந்திய அணி, மீண்டும் மகுடம் சூடினால் அது புதிய உச்சமாக அமையும்.
அக்பர் அலி தலைமையிலான வங்காளதேச அணியை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிட முடியாது. நியூசிலாந்துக்கு எதிரான அரைஇறுதியில் 212 ரன் இலக்கை சேசிங் செய்து அமர்க்களப்படுத்தியது. பேட்டிங்கில் மமுதுல் ஹசன் ஜாய் (ஒரு சதத்துடன் 176 ரன்), தன்ஜித் ஹசன் (149 ரன்), ஷகதத் ஹூசைன் (130 ரன்), பந்து வீச்சில் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஷகிபுல் ஹசன் (11 விக்கெட்), வேகப்பந்து வீச்சாளர் ஷோரிபுல் இஸ்லாம் (7 விக்கெட்) ஆகியோர் மிரட்டியுள்ளனர். இவர்கள் கைவரிசை காட்டுவதை பொறுத்தே வங்காளதேசத்தின் வெற்றி வாய்ப்பு அமையும்.
உலக கோப்பை போட்டி ஒன்றில் வங்காளதேச அணி இறுதிசுற்றை எட்டியிருப்பது இதுவே முதல் முறையாகும். எனவே வெற்றி கண்டால், அது வங்காளதேச அணிக்கு சரித்திர சாதனையாக பதிவாகும்.
இவ்விரு அணிகளும் ஏற்கனவே ஜூனியர் உலக கோப்பை போட்டியில் 4 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 3-ல் இந்தியாவும், ஒன்றில் வங்காளதேசமும் வெற்றி பெற்றுள்ளன. இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + 3 =