குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தி.மு.க. நடத்துவது கட்டாயக் கையெழுத்து இயக்கமா? மு.க.ஸ்டாலின் பதில்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக மற்றும் தோழமைக் கட்சிகளால் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்து இயக்கம் , கட்டாயக் கையெழுத்து இயக்கமா? என்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பதில் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக கட்சித் தொண்டர்களுக்கு ஸ்டாலின்  இன்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

நாம் எவ்வளவு சரியான பாதையில், முறையாகவும் எச்சரிக்கையாகவும் அளந்து அடியெடுத்து வைத்துச்  செல்கிறோம் என்பதை,  அரசியல் எதிரிகளின் அலறலில் இருந்தே அறிந்து கொள்ள முடியும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு இவற்றிற்கு எதிராக,  தமிழக மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்துவது என ஜனவரி 24ஆம் நாள் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், பிப்ரவரி 2ஆம் நாள் தொடங்கி பிப்ரவரி 8ஆம் நாள் வரை நாள்தோறும் நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கம் வெற்றிகரமாக நிறைவேறியிருக்கிறது.

மக்களின் பெரும் ஆர்வத்துடனும் தன்னிச்சையான பங்கேற்புடனும் கையெழுத்து இயக்கம் களிப்புறத்தக்க வெற்றி பெற்றிருப்பதை, நம்மைவிட நமது அரசியல் எதிரிகள் நன்றாக உணர்ந்து விட்டார்கள். மாநில அடிமை அரசில், நேரடி பா.ஜ.க. பிரதிநிதி போலவே செயல்படும் அமைச்சர் ஒருவர், “தி.மு.க. நடத்தும் கையெழுத்து இயக்கத்தை மத்திய அரசு ஏன் தடை செய்யாமல் இருக்கிறது?” என்று வயிற்றெரிச்சலில் பேசியிருக்கிறார். மத்திய பா.ஜ.க அரசில், முன்னாள் மாண்புமிகுவாக இருந்து மக்களிடம் தோல்வி அடைந்த மூத்த தலைவர் ஒருவர், “தி.மு.க. கட்டாயக் கையெழுத்து இயக்கம் நடத்துகிறது” என்று பேசியிருக்கிறார்.

கட்டாயமாகக் கையெழுத்து வாங்குவது, மரியாதை நிமித்தமாக சந்திக்க வந்த ஓய்வு பெற்ற நீதிபதிக்கு கட்டாயமாக பா.ஜ.க. உறுப்பினர் அட்டையைக் கொடுப்பது, மிஸ்டுகால்களை நம்பியே உறுப்பினர் எண்ணிக்கை பற்றி உறக்கத்தில் மனக்கணக்கு போடுவது என செயல்படுகிறவர்களுக்கு, தி.மு.கழகமும் தோழமைக் கட்சிகளும் மேற்கொண்ட கையெழுத்து இயக்கமும், அதற்கு மக்கள் காட்டிய  வரவேற்பும் ஆர்வமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி, இப்படித்தான் புலம்பி ஒப்பாரி வைத்திடச்  செய்திடும்.

பன்மைத் தன்மையும், மதச்சார்பின்மையும் ஊறிப்போன  இந்தியாவைப் பாதுகாக்கும் அரசியல் சாசனத்திற்கு எதிரான குடியுரிமைத் திருத்தச் சட்டம் உள்ளிட்ட ஆபத்துகளை மக்களிடம் விளக்கி, அவர்களின் சம்மதத்துடனும் முழு மனதுடனும் கையெழுத்துப் பெற வேண்டும் என்பதை கழக நிர்வாகிகளுக்கு விளக்கி, அதுதொடர்பாக அந்தந்த மாவட்ட-ஒன்றிய-பகுதி நிர்வாகிகள் தோழமைக்கட்சியினருடன் ஆலோசனை நடத்திய பிறகே, பிப்ரவரி 2ஆம் நாள் தமிழ்நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் தொடங்கியது.

எதற்காக இந்த இயக்கம் என்பதை விளக்கிய பிறகே மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. இந்துக்கள்-முஸ்லிம்கள்-கிறிஸ்தவர்கள் எனப் பலரும் மத எல்லைகளைக்  கடந்து, இந்தியாவைக் காத்திட வேண்டும் என்ற உண்மையான தேசப்பற்றுடன் கையெழுத்திட்டு ஆதரவு தந்தனர். மக்கள் ஆர்வத்துடன் கையெழுத்திட வருகிற நிலையில், முந்தைய நாட்களைவிட கூடுதலான முனைப்புடன் செயல்பட்டு, ஒரு கோடி கையெழுத்து என்ற இலக்கையும் கடந்து, பெரும் எண்ணிக்கையில் கையெழுத்துகள் பதிவாக வேண்டும் என்பதை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டேன்.

இஸ்லாமிய அமைப்பினர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து இந்தச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். அப்போது  ‘நான் பிறந்த இடம், தேதி அதற்கான சான்றிதழ் இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை. எனக்கே ஆபத்து வரும் போல் இருக்கிறது’ என்று அவர் சொல்லி இருக்கிறார்.

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தாலும் அதன் தொடர் நடவடிக்கைகளாலும் முதலமைச்சர் பதவியில் எப்படியாவது நீடிக்க வேண்டும் என்பதற்காக  எதையும் அடமானம் வைக்கும் எடப்பாடிக்கே ஆபத்து வரும் நிலை உள்ளது. அவருக்கு மட்டுமல்ல, திடீரென பேட்டி கொடுக்க கூடியவர்களுக்கும் கூட அவர்களின் பெற்றோர் பிறந்த இடமும், தேதியும் சரியாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, நம்மை விமர்சிப்பவர்களையும் சேர்த்து அனைவரையும் பாதுகாக்கத்தான் இந்தக்  கையெழுத்து இயக்கத்தை நடத்தினோம். 2 கோடியைத் தாண்டியுள்ள கையெழுத்துகளை இந்தியக் குடியரசுத் தலைவர்  அவர்களிடம் அளிக்க இருக்கிறோம். அதன்பிறகும், மத்திய அரசு இதுபற்றிப்  பரிசீலிக்கத் தவறினால், அடுத்த கட்டப் போராட்டத்தை முன்னெடுப்போம்.

பிப்ரவரி 14ந் தேதி கூடுகின்ற தமிழ் நாடு அரசின் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரிலாவது, சிஏஏவுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றி, அதிமுக அரசு தனது பாவங்களுக்குக்  கழுவாய் தேடிக் கொள்ள வேண்டும் என்பதையும் மக்களிடம் எடுத்துரைத்திருக்கிறேன்.

தமிழ்நாட்டில் எக்காரணம் கொண்டும் தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டை அ.தி.மு.க அரசு அனுமதிக்கக் கூடாது.  பா.ஜ.க அரசின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அடிமை அ.தி.மு.க அரசு இதனை செயல்படுத்த நினைத்தால் மக்களின் கடும் எதிர்ப்புக்கு ஆளாக நேரிடும் என்பதை இப்போதே எச்சரிக்கையுடன் தெரிவிக்கிறேன்.

மனமுவந்து முன்வந்து கையெழுத்திட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். மக்களுக்கு எதிரான-நாட்டை மதரீதியாகத் துண்டாடும் சி.ஏ.ஏ உள்ளிட்டவற்றை எதிர்த்து கழகத்தின் போராட்டம் தொடரும். மக்களின் ஆதரவுடன் – மக்களுக்கு எதிரான எதையும் முறியடித்து – மக்களின் நலன் காப்பதற்குத் தொடர்ந்து பாடுபடுவோம்!

இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 + 1 =