பிரிட்டன் பிரதமர் ஐரோப்பிய யூனியனுக்கு புது நிபந்தனை

லண்டன், : ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியுள்ள நிலையில், அதனுடனான வர்த்தக உறவு குறித்த பேச்சு துவங்க உள்ளது. இந்த பேச்சுக்கு, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் புது நிபந்தனை விதித்துள்ளார்.
ஐரோப்பிய யூனியன் அமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறும், ‘பிரெக்சிட்’ நடவடிக்கை நடந்து வந்தது. கடந்த, ஜன., 31ம் தேதி இரவில் இருந்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியது. இருப்பினும், வரும், டிச., 31 வரை, சில நடைமுறைகள் தொடர உள்ளது.

இந்த வெளியேற்றம் மூலம், உலகின் எந்த நாட்டுடனும், பொருளாதார மற்றும் வர்த்தக உறவுக்கான முயற்சிகளை, பிரிட்டன் தனித்து மேற்கொள்ள முடியும். ஐரோப்பிய யூனியன் அமைப்பில் இருந்து வெளியேறினாலும், அதனுடனும் வர்த்தக உறவை பிரிட்டன் தொடரலாம். இது தொடர்பான பேச்சு, மார்ச் மாதம் துவங்க உள்ளது.

இந்த நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியதாவது:பிரெக்சிட் என்ற வார்த்தையை இனி பயன்படுத்தப் போவதில்லை. அது முடிந்த கதை; வரலாறாக மாறிவிட்டது. அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தே இனி பேசுவோம்.
ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறினாலும், அதனுடனான வர்த்தக உறவுக்கு தடை ஏதும் இல்லை. இனி, நமக்கு கட்டுப்பாடுகள் இல்லை. ஐரோப்பிய யூனியன் மற்றும் வடஅமெரிக்க நாடான கனடா இடையேயான வர்த்தக உறவில் சில நிபந்தனைகள் உள்ளன. அதுபோன்ற கட்டுப்பாடுகளை ஏற்க முடியாது. ஐரோப்பிய யூனியனின் சட்டங்கள், வரிகள் நம் மீது திணிக்கப்படக் கூடாது.தடையில்லா வர்த்தக உறவையே விரும்புகிறோம் என்றார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

24 − 17 =