குரூப்-4 தேர்வை ரத்து செய்யப்படாது: அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்

டி.என்.பி.எஸ்.சி. நடத்திய குரூப்-4 தேர்வை ரத்து செய்யும் வாய்ப்பு இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.

தமிழகத்தில், குரூப்-4 தேர்வு முறைகேடு விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அடுத்தடுத்த பலரும் சிக்கியுள்ள நிலையில், முக்கிய அதிகாரிகளும் கைதாவதால், பெருமளவு முறைகேடு நடந்திருக்குமோ என்ற சந்தேகம் எழுப்பப்பட்டது. எனவே, குரூப்-4 தேர்வை ரத்து செய்ய தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், பணியாளர், நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் ஸ்வர்ணா மற்றும் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளுடன் அமைச்சர் ஜெயக்குமார், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:

டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு புகார் வந்தவுடன் உடனடியாக விசாரணை நடத்தப்பட்டது. குறைகள் இல்லாமல் போட்டி தேர்வுகளை நடத்த அரசு நடவடிக்கை எடுக்கும். முறைகேடு புகாரால் டிஎன்பிஎஸ்சியின் நம்பகத்தன்மையை எந்த வகையிலும் சந்தேகிக்கக்கூடாது.

தவறு செய்த கறுப்பு ஆடுகள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை பாயும். டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு செய்தவர்கள் பெரும் புள்ளியாக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தவறு இழைத்தவர்கள் யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை.

ஒரு சில மையங்களில் நடந்த முறைக்கேட்டால் ஒட்டுமொத்தமாக குறைகூற கூடாது. வருங்காலங்களில் முறைகேடின்றி டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தப்படும். குரூப்-4 தேர்வு ரத்தாக வாய்ப்பு இல்லை. தரவரிசைப் பட்டியலில் அடுத்த நிலையில் இருப்பவர்களுக்கு பணி ஆணை வழங்கப்படும்.

குரூப்-4 தேர்வை 16 லட்சம் பேர் எழுதிய நிலையில், 99 பேருக்காக ஒட்டுமொத்த தேர்வையும் ரத்து செய்வது நியாயமாக இருக்காது. போட்டித் தேர்வு பயிற்சி மையங்களை கட்டுப்படுத்த, அரசு தனிச்சட்டம் கொண்டு வரும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 2 = 1