குரூப்-4 தேர்வு முறைகேடு புரிந்த 99 தேர்வர்கள் தகுதி நீக்கம்! 2 வட்டாட்சியர்கள் உட்பட 12 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்கு

குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, 99 தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அதிரடியாக அறிவித்துள்ளது. அத்துடன், 2 வட்டாட்சியர்கள் உட்பட 12 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ம் தேதி நடந்த குரூப் 4 தேர்வுக்கான தரவரிசை பட்டியல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இதில், 35 பேர் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய இருதேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் முதல் 100 இடங்களுக்குள் இடம்பிடித்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களிடம் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அத்துடன், இது தொடர்பாக டி.ஜி.பி. திரிபாதியிடம், டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தரப்பில் புகாரும் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், குரூப்-4 தேர்வு முறைகேட்டுக்கு ஆளான 99 பேரை தகுதி நீக்கம் செய்வதாக டி.என்.பி.எஸ்.சி. அதிரடியாக அறிவித்துள்ளது. அவர்கள், தேர்வாணைய தேர்வை வாழ்நாள் முழுவதும் எழுதவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களை தவிர்த்து வேறு எந்த மையங்களிலும் முறைகேடு நடைபெறவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் மற்றொரு திருப்பமாக, ராமேஸ்வரம், கீழக்கரை வட்டாட்சியர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில், வட்டாட்சியர்கள் வீரராஜ், பார்த்தசாரதி உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் வட்டாட்சியர் பார்த்தசாரதி, கீழக்கரை வட்டாட்சியர் வீரராஜ் உட்பட 12 பேர் மீது, 120B, 420, 469, 467, 466 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்வு முறைகேடு தொடர்பாக வட்டாட்சியர்கள் இருவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது, இந்த விவகாரத்தில் புதிய திருப்பத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 39 = 42