ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்கள் ரத்து ! முறைகேடு புகார் எழுந்ததால் டிஎன்பிஎஸ்சி அதிரடி

குரூப் 4 தேர்வு முறைகேடு நடைபெற்றதாக கூறப்படும் கீழக்கரை, ராமேஸ்வரம் ஆகிய மையங்களில் இனி தேர்வுகள் நடைபெறாது என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விஏஓ, இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 9300 காலிப் பணியிடங்களுக்கு, குரூப்-4 தேர்வு நடைபெற்றது. டிஎன்பிஎஸ்சி நடத்திய இத்தேர்வில், தமிழகம் முழுவதும் 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர்.

இதன் முடிவுகள் வெளியானபோது, ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை ஆகிய ஊர்களில் அமைக்கப்பட்டிருந்த 9 மையங்களில் தேர்வெழுதிய பலரும் தேர்வாகி இருந்தனர். குறிப்பாக, மாநில அளவில் முதல் 100 இடங்களில், இந்த மையங்களில் தேர்வெழுதிய 40 பேர் இடம் பெற்றனர்.

மேலும், தேர்வானவர்கள் அனைவரும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. அங்கு முறைகேடு நடைபெற்றிருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டது. இதனால் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் விசாரணை மேற்கொண்டது.

மேலும், முறைகேடு நடைபெறாமல் இருக்க தேர்வு நடைமுறைகளில் மாற்றங்களை செய்யவும் டிஎன்பிஎஸ்சி முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக, வெளி மாவட்ட தேர்வு மையங்களை தேர்வு செய்வோர் அதற்கான உரிய காரணத்தை விண்ணப்ப படிவத்தில் தெரிவிக்க வேண்டும் என புதிய கட்டுப்பாட்டை விதித்து, நேற்று உத்தரவிட்டது.

இந்நிலையில், குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்படும் ராமேஸ்வரத்தில் உள்ள 6 மையங்கள் கீழக்கரையில் உள்ள 3 மையங்களில் இனி தேர்வுகள் நடைபெறாது என்று புதிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

53 − 47 =