அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய ரஞ்சித் குமாருக்கு கார் பரிசு!

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 16 காளைகளின் திமிலை கெத்தாக அடக்கிய ரஞ்சித் குமாருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.

உலகப் பிரசித்திபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.
இதில், 700 காளைகள் பங்கேற்க, அவற்றை அடக்க 900 வீரர்கள் சுற்று அடிப்படையில் 100 பேர் வீதம் களம் இறங்கினர்.

இந்த ஜல்லிக்கட்டைக் காண தமிழகத்தின் பல பகுதிகளைச் சேர்ந்தோர் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் ஆர்வமுடன் குவிந்தனர். இதில், காளைகளை அடக்கும் வீரர்களுக்கும், அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டு முடிவில் சிறந்த வீரருக்கான முதல் பரிசை அலங்காநல்லூரைச் சேர்ந்த ரஞ்சித் குமார் என்ற வீரர் தட்டிச் சென்றார். அவருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சார்பில் கார் பரிசாக கிடைத்தது.

14 காளைகளை அடக்கிய அழகர்கோவில் கார்த்திக் என்ற வீரருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது.13 காளைகளை அடக்கி 3-ம் இடம் பிடித்த அரிட்டாமங்கலம் கணேசனுக்கு ஆறுதல் பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது.

இந்த ஜல்லிக்கட்டில் சிறந்த காளையாக மதுரை குலமங்கலம் மார்நாடு என்பவரின் காளை 12 புள்ளிகள் பெற்று தேர்வு செய்யப்பட்டது.காளையின் உரிமையாளருக்கு துணை முதல்வர் சார்பில் கார் பரிசளிக்கப்பட்டது. 10 புள்ளிகள் பெற்ற புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் அனுராதாவின் காளை ராவணன் காளை 2-ம் பரிசை தட்டிச் சென்றது.

பரிசளிப்பு நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் உதயகுமார், விஜயபாஸ்கர், மதுரை ஆட்சியர் வினய், ஜல்லிக்கட்டு கண்காணிப்புக்காக உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் காளையின் உரிமையாளர் ஒருவர் உயிரிழந்தார். ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்க்க வந்த மற்றொருவர் மயக்கமடைந்த உயிரிழந்தார். காளைகள் முட்டியதில் 70-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

21 − = 16