பா.ஜ., தேர்தல் செலவு ரூ.1,264 கோடி: காங்., செய்த செலவு ரூ.820 கோடி

புதுடில்லி : கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தல் மற்றும் நான்கு மாநில சட்டசபை தேர்தல்களுக்கு, 1,264 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக, பா.ஜ., தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ், 820 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது.

பா.ஜ., தாக்கல்:

ஒவ்வொரு முறையும் தேர்தல் நடக்கும் போது, அதற்கு எவ்வளவு செலவிடப்பட்டது என்ற விபரத்தை, அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையத்திடம் ஒவ்வொரு ஆண்டும் தாக்கல் செய்ய வேண்டும். இந்த விபரம், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும்.

இதன்படி, கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தல், ஏப்ரல், மே மாதங்களில் நடந்த, ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் செய்யப்பட்ட செலவு குறித்த விபரத்தை, பா.ஜ., தாக்கல் செய்துள்ளது. இதில், இந்த தேர்தலுக்காக, 1,264 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது. கடந்த, 2014 லோக்சபா தேர்தலுக்கு, பா.ஜ., 714 கோடி ரூபாய் செலவு செய்திருந்தது.

ரூ.516 கோடி:

கடந்தாண்டு செய்யப்பட்ட செலவுகளில், ஊடகங்களில் விளம்பரம் செய்வதற்காக மட்டும், 325 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ், லோக்சபா தேர்தல் மற்றும் நான்கு மாநில சட்டசபை தேர்தலுக்கு, 820 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக தெரிவித்து உள்ளது. இதற்கு முந்தைய லோக்சபா தேர்தலுக்கு, காங்கிரஸ், 516 கோடி ரூபாய் செலவு செய்திருந்தது. இந்த தகவல், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

83 − 80 =