திமுக – காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஆரம்பம்! கூட்டணி தர்மத்தை மீறியதாக திமுக மீது பகிரங்க புகார்

ஊரக உள்ளாட்சி தேர்தலில், கூட்டணி தர்மத்திற்கு புறம்பாக திமுக செயல்பட்டு வருவதாக, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். இதன் மூலம், திமுக – காங்கிரஸ் உறவில் விரிசல் ஏற்பட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தமிழகத்தில், ஊரகப்பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில், திமுக கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக உள்ளிட்டவை கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அதிமுகவைவிட அதிக இடங்களை திமுக வென்றது.

அத்துடன், நாளை (11ம் தேதி) ஒன்றிய, மாவட்ட ஊராட்சி தலைவர்களுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்து, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி மற்றும் சட்டமன்ற குழுத் தலைவர் கே.ஆர். ராமசாமி ஆகியோர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை, திமுக – காங்கிரஸ் உறவில் ஏற்பட்டுள்ள விரிசலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

இது தொடர்பாக, அவர்கள் இருவரும் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைமை ஒதுக்கிய இடங்களில் கூட காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் ஒன்று கூட காங்கிரஸ் கட்சிக்கு திமுக வழங்கவில்லை.

மொத்தம், 303 ஒன்றிய தலைவர் பதவிகளில் 2 மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கியுள்ளது. மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர் பதவிகளில் காங்கிரஸ் போட்டியிட திமுக ஒத்துழைப்பு தரவில்லை.

திமுக தலைமையில் இருந்து அறிவுறுத்தப்பட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் செயல்பாடு கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய, மாவட்ட ஊராட்சி தலைவர்களுக்கு மறைமுகத் தேர்தல் நாளை நடைபெற உள்ளது திமுகவை விமர்சித்து காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள இந்த அறிக்கை, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 2 = 1