மறைமுகத்தேர்தலை வீடியோ பதிவு செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு!

உள்ளாட்சிப் பதவிகளுக்கு நாளை மறுதினம் நடைபெறவுள்ள மறைமுகத் தேர்தலை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று கோரி திமுக தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரகப் பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த மாதம் 27, 30 தேதிகளில் தேர்தல் நடைபெற்றது. ஊராட்சித் தலைவர், ஊராட்சி உறுப்பினர், ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் முடிந்து, வெற்றி பெற்றவர்கள் கடந்த 6ஆம் தேதி பதவியேற்றனர்.

மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி துணைத் தலைவர் போன்ற பதவிகளுக்கு நாளை மறுதினம் மறைமுகத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தற்போது வெற்றி பெற்றுள்ள அந்தந்த அமைப்புகளின் கவுன்சிலர்கள் ஓட்டுப் போட்டு இந்த நிர்வாகிகளை தேர்வு செய்யவுள்ளனர்.

இதனால் இந்த தேர்தலில் வெற்றி பெற மாற்றுக்கட்சி கவுன்சிலர்கள் மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் பலரை குதிரை பேரம் நடத்தி இழுப்பதும், வலுக் கட்டாயமாக இழுத்துச் செல்வதும் என கடந்த சில நாட்களாக பரபரப்பு காணப்படுகிறது.

இந்த நிலையில், மறைமுகத் தேர்தலில் கடும் போட்டி நிலவும் சில இடங்களில் முறைகேடுகள் என்று கருதி, அதனை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என திமுக தரப்பில் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதை ஏற்ற உயர் நீதிமன்ற நீதிபதி, முறையாக மனு செய்தால், வழக்கை விசாரிப்பதாக தெரிவித்தார்.

இதற்கிடையே, ஊராட்சி தலைவர், ஒன்றியத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் வீடியோ பதிவு செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 6