தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யும்? வானிலை மையம் புதிய தகவல்

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனிடையே தென் மாவட்டங்களில் பல இடங்களில் இரவில் மழை பெய்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று கூறியுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகத்தில் அனேக இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வடதமிழகத்தில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

அதேபோல், குமரி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல் பரப்பிற்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே பல இடங்களில் விடிய விடிய மழை பெய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி, பசும்பொன், அபிராமம் பேரையூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் ஒரு மணி கனமழை பெய்தது.

தூத்துக்குடி, திருச்செந்தூர், குலசேகரபட்டினம், உடன்குடி, கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. சில இடங்களில் இன்று காலையிலும் மழை தொடர்ந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 14 = 19