எம்.பி.க்கள்எண்ணிக்கையை 1000 ஆக உயர்த்த வேண்டும் – பிரணாப் முகர்ஜி யோசனை

தற்போதைய மக்கள் தொகையை கருத்தில் கொண்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 1000 ஆக உயர்த்த வேண்டும் என, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி யோசனை தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவாக டெல்லியில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், முன்னாள் குடியரசு தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான பிரணாப் முகர்ஜி பங்கேற்றுபேசினார். அவரது உரை வருமாறு:

ஆட்சியில் இருப்பவர்கள் பெரும்பான்மைவாத சிந்தனையுடன் ஒருபோதும் செயல்படக்கூடாது. அனைத்து தரப்பினரையும் அனுசரித்து, வளர்ச்சிப்பாதையை நோக்கி பயணிப்பது மினவும் அவசியமாகும்.

தேர்தலில் கட்சிகளுக்கு எண்ணிக்கை அடிப்படையில் வேண்டுமானால் பெரும்பான்மை பலம் கிடைத்திருக்கலாம். ஆனால், பெரும்பான்மையான வாக்காளர்கள் ஒருபோதும் ஒரே கட்சியை ஆதரித்ததாக வரலாறு இல்லை. இதை அரசியல் கட்சிகள் மனதில் கொள்ள வேண்டும்.

தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை, 1977-ம் ஆண்டில் கடைசியாக திருத்தி அமைக்கப்பட்டது. இது, 1971-ம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. அப்போது மக்கள் தொகை 55 கோடியாக இருந்தது.

ஆனால், இப்போது மக்கள் தொகை இரு மடங்கு அதிகரித்துவிட்டது. எனவே மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை அதற்கேற்ப 1000 ஆக உயர்த்த வேண்டும். சராசரியாக ஒரு மக்களவை தொகுதியில் 16 முதல் 18 லட்சம் வரை வாக்காளர்கள் இருப்பதால், மக்கள் பிரதிநிதிகள் வாக்காளர்களுடன் தொடர்பில் இருப்பது சிரமமானது என்று பிரணாப் முகர்ஜி பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

88 − 86 =