சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட இயலாது – உச்ச நீதிமன்றம்

சபரிமலை கோவிலுக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு உத்தரவிட இயலாது என்று, உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

கேரளாவில் உள்ள சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று, கடந்தாண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு மனு மீது தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அந்த மனுவை 7 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது. அத்துடன், கடந்தாண்டு பிறப்பித்த உத்தரவுக்கு எந்த தடையும் இல்லை என்றது.

அதேநேரம், விளம்பரம் தேடும் நோக்கில் சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்று கேரள அரசு அறிவித்தது. அத்துடன், சபரிமலைக்கு செல்ல முயன்ற ஏராளமான பெண்களை, கேரள போலீசார் திருப்பி அனுப்பினர்.

இதைமீறி, பெண் ஆர்வலர் திருப்தி தேசாய், பிந்து அம்மணி உள்ளிட்டோர் சபரிமலை செல்ல முயன்ற போது, அவர்கள் மீது மிளகு ஸ்பிரே அடிக்கப்பட்டது. இதனால் பரபரப்பு நிலவியது. இதை தொடர்ந்து, சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்ய, தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டுமென்று, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே, விரைவில் பெரிய அரசியலமைப்பு அமர்வு உருவாக்கப்படும். இந்த விவகாரத்தை அந்த அமர்வு விசாரிக்கும். நீதிமன்றம் எந்த வன்முறையையும் விரும்பவில்லை.

சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட முடியாது. சபரிமலையில் ஏற்கனவே வழங்கிய பாதுகாப்பு மட்டுமே தொடரும் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 50 = 56