திண்டிவனத்துலே இறங்கலையா?

சென்னையிலிருந்து மயிலாடுதுறை சென்று கொண்டிருந்த பேருந்து..

தாம்பரம் அருகில் வந்த போது வயதான அம்மா ஒருவர் எழுந்து கண்டக்டரிடம், “திண்டிவனம் வந்திடுச்சா?” என்று கேட்டார்.

“திண்டிவனமா? அதுக்கு இன்னும் ரொம்ப தூரம் இருக்கும்மா”

“சரி”

செங்கல்பட்டு வந்தது.

“சார்.. திண்டிவனம் வந்திடுச்சா?”

“அட.. இன்னும் இல்லைம்மா”

மேல்மருவத்தூரைத் தாண்டியது.

“திண்டிவனம் வந்திடுச்சா?”

“ஐயோ அம்மா.. உங்க இம்சை தாங்கலை. பேசாம கண்ணை மூடிட்டு தூங்கும்மா. திண்டிவனம் வந்தா நானே சொல்றேன்”

“சரி”

அந்தம்மா கண்களை மூடித் தூங்கலானார்.

பேருந்து கடலூரைத் தாண்டிக் கொண்டிருந்தது.

“கண்டக்டர் சார்… திண்டிவனம் வந்திடுச்சா?” – தூங்கி எழுந்த அந்தம்மா கேட்டார். கண்டக்டருக்குத் தூக்கி வாரிப் போட்டது. “ஐயையோ.. நான் மறந்திட்டேனே. நீ ஏம்மா தூங்கின?” பழியை அந்தம்மா மீது தூக்கிப் போட்டார் கண்டக்டர். பேருந்தில் இருந்த அத்தனை பேரின் கோபமும் கண்டக்டர் மீது திரும்பியது. “பாவம் அந்தம்மா.. வண்டியைத் திருப்புய்யா.. திரும்ப திண்டிவனத்துலே கொண்டு போய் அந்தம்மா விட்டுட்டு திரும்பி வா” – அநேகமாக சொன்ன நபருக்கு கும்பகோணமாக இருக்க வேண்டும்.

கண்டக்டருக்கு வேறு வழி தெரியவில்லை. பேருந்தைத் திருப்பினார். வந்த வழியே திண்டிவனத்துக்குச் சென்றது.

ஒரு வழியாக சில மணி நேரங்களில் திண்டிவனம் வந்தது. “எம்மா.. இறங்கும்மா” – சலித்தபடியே கண்டக்டர் கூறினார். பேருந்தில் இருந்த அந்த கும்பகோணத்துக்காரருக்கு முகத்தில் வெற்றிப் புன்னகை.

சாவகாசமாக எழுந்த அந்தம்மா மேலே இருந்து பையை எடுத்துப் பிரித்து அதிலிருந்து பிரஷர் மாத்திரையை எடுத்துப் போட்டு முழுங்கி தண்ணீர் குடித்து திரும்ப அமர்ந்து தூக்கத்தைத் தொடர்ந்தார்.

“என்னம்மா.. திண்டிவனத்துலே இறங்கலையா?” – கண்டக்டர் கேட்டார்.

“நான் ஏன் திண்டிவனத்துலே இறங்கணும்? திண்டிவனம் வந்தவுடனே பிரஷர் மாத்திரை மறந்திடாம போட்டுடுன்னு என் பையன் சொல்லி அனுப்பினான். அதான். நான் மயிலாடுதுறை’ல போகணும்?”

இப்போது கண்டக்டருக்கு பிரஷர் படு பயங்கரமாக எகிறத் தொடங்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 31 = 39