34வது மாவட்டமாக உதயமானது கள்ளக்குறிச்சி! முதல்வர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார்

தமிழகத்தின் 34வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி இன்று உதயமானது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய மாவட்டத்திற்கான நடைமுறை பணிகளை தொடங்கி வைத்தார்.

விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்படும் என்று முதல்வர், கடந்த ஜனவரியில் அறிவித்தார். இது குறித்த அரசாணையை கடந்த 13இல் வெளியிடப்பட்டது. அத்துடன், மாவட்ட ஆட்சியராக கிரண்குராலாவும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக ஜெயசந்திரனும் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரித்து, புதிதாக தோற்றுவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. கள்ளக்குறிச்சி புறவழிச்சாலை அருகே உள்ள சாமியாா் மடம் மைதானத்தில் நடைபெற்ற  விழாவுக்கு தமிழக துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தலைமை தாங்கினார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்து, திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இவ்விழாவில் வருவாய், பேரிடா் மேலாண்மைத்துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா், சட்டம்-கனிம வளத்துறை அமைச்சா் சி.வி.சண்முகம், எம்எல்ஏக்கள் இரா.குமரகுரு, அ.பிரபு, எம்.சக்கரபாணி, ஆா்.முத்தமிழ்செல்வன், விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

புதிய மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, கல்வராயன்மலை ஆகிய வட்டங்கள் இடம் பெற்றுள்ளன.

ஏறத்தாழ 13 லட்சம் மக்கள் தொகை கொண்ட கள்ளக்குறிச்சியின் முக்கிய தொழில் விவசாயம். நெல், கரும்பு, மக்காசோளம், மஞ்சள், மரவள்ளி, பருத்தி, மணிலா, கம்பு, உளுந்து சாகுபடியாகும். இம்மாவட்டத்தில் கோமுகி, மணிமுத்தா அணைகளில் தேக்கப்படும் நீர் 16 ஆயிரம் ஏக்கர் நிலத்தை பாசன வசதி செய்ய வைக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 − = 11