தம்பி அதிபர்; அண்ணன் பிரதமர்! ராஜபக்சேக்களின் பிடியில் இலங்கை

அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது அண்ணன் மகிந்த ராஜபக்சேவை பிரதமர் பதவியில் அமர வைத்ததன் மூலம், குட்டி நாடான இலங்கை, ராஜபக்சே குடும்பப் பிடியில் சிக்கியுள்ளதாக, அரசியல் நோக்கர்கள் கவலைடன் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில், 2005 முதல் 10 ஆண்டுகள் இலங்கையின் அதிபராக இருந்தார் மகிந்த ராஜபக்சே. அப்போது அவரது தம்பி கோத்தபய ராஜபக்சே, ராணுவ அமைச்சராக இருந்தார். அப்போது தான், 37 ஆண்டு கால ஈழப் போராட்டத்தை துப்பாக்கி முனையில் முடிவுக்கு கொண்டு வந்தனர்.

இதன் பிறகு, 2015-ல் ராஜபக்சே குடும்பத்தினர் ஆட்சி அதிகாரத்தை இழந்தனர். அதிபராக மைத்ரிபால ஸ்ரீசேனாவும், பிரதமராக ரணில் விக்கிரமசிங்கேவும் பொறுப்புக்கு வந்தனர். அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சேவின் தம்பி கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார்.

இதன் மூலம், இலங்கையில் மீண்டும் ராஜபக்சே குடும்பத்தின் ஆதிக்கம் தலைதூக்க தொடங்கி விட்டது. அதிபரான அடுத்த நிமிடமே, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் இருந்த ஐக்கிய தேசிய கட்சியின் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு, ராஜபக்சே குடும்பத்தினர் நெருக்கடி தர ஆரம்பித்தனர்.

இதனால், பதவிக் காலம் முடியும் முன்னரே தமது பிரதமர் பதவியை ரனில் ராஜினாமா செய்தார். மறு நிமிடமே, பிரதமர் பதவிக்கு ராஜபக்சே நியமிக்கப்பட்டார். இன்று பிரதமராக ராஜபக்சே பதவியேற்றுள்ளார்.

குட்டித்தீவான இலங்கை, இதன் மூலம் தம்பி அதிபர், அண்ணன் பிரதமர் என, இருவரின் கைகளில் சிக்கியுள்ளது. போதாக்குறைக்கு, மற்றொரு சகோதரர் சமல் ராஜபக்சே, மகன் நமல் ராஜபக்சே ஆகியோருக்கும் முக்கியப் பதவிகளை பெறவுள்ளனர். இனி, ராஜபக்சேக்களின் ராஜ்ஜியம் தான் நடக்கப் போகிறது.

ஆனால், ராஜபக்சேக்களின் பிடியில் இலங்கை சிக்கியிருப்பது அங்குள்ள தமிழர்களுக்கும், இந்தியாவுக்கும் நல்லதல்ல என்பது, இங்குள்ள அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது. சீனாவுடன் நெருக்கம் காட்டி வந்த ராஜபக்சே, இனி மீண்டும் சீனாவுடன் நட்புறவு பாராட்டுவார் என்று எதிர்பார்க்கலாம்; இது இந்தியாவுக்கு பெரும் தலைவலியாக மாறும் என்பதும் அவர்களின் கருத்தாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

39 − 30 =