எங்களோடு உறவாடிவிட்டு முதலைக்கண்ணீர் வடிப்பதா? தமிழக தலைவர்கள் சீண்டும் ராஜபக்சே மகன்

சந்தர்ப்பவாத அரசியலை தக்க வைக்க ஈழத்தமிழர்கள் மீது அக்கறை இருப்பதுபோல் தமிழக தலைவர்கள் சிலர் முதலைக்கண்ணீர் வடிப்பதாக, இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சே குற்றம்சாட்டியுள்ளார்.

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று, கோத்தபய அதிபராகியுள்ளார். சிங்களவர்களின் ஆதரவு கோத்தபயவுக்கு இருந்த போதும், தமிழர் பகுதிகளில் அவருக்கு அதிக ஓட்டுகள் விழவில்லை. அவரது வெற்றி, இலங்கை தமிழர்கள் மற்றும் தமிழக அரசியல் தலைவர்கள் சிலருக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.

இதுபற்றி குறிப்பிட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஈழத் தமிழர்கள் வாழ்வில் மீண்டும் அச்சம் ஏற்பட்டுள்ளது என்றார். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமரவளவன், நாம் தமிழர் கட்சி சீமான் மற்றும் பழ.நெடுமாறன் போன்றோரும், கோத்தபய அதிபராகி இருப்பதற்கு தங்களின் கவலைகளை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், தமிழக தலைவர்கள் முதலைக் கண்ணீர் வடிப்பதாக ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களது சுயநல மற்றும் சந்தர்ப்பவாத அரசியலை தக்க வைக்க, ஈழத்தமிழர்கள் மீது அக்கறை இருப்பதுபோல் தமிழக தலைவர்கள் சிலர் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2009ல் போர் முடிந்ததும், திமுக பாராளுமன்ற குழுவினர் இலங்கை வந்து, ராஜபக்சேவுடன் சிநேகமாக பழகினர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எங்களுடன் சிநேகமாக கலந்துரையாடி அனைத்தையும் அறிந்து கொண்டார். அத்தகையவர் இன்று சந்தர்ப்பவாத அறிக்கை விடுவது அதிர்ச்சியாக உள்ளது என்று, அதில் நமல் கூறியுள்ளார்.

தமிழர்களுக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருப்பினும், நம் தமிழக தலைவர்களை விமர்சித்து வெளிநாட்டு எம்.பி. ஒருவர் அறிக்கை விட்டிருப்பது, அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 86 = 92