சென்னை ஐ.ஐ.டி. மாணவி தற்கொலை விவகாரத்தில் நடவடிக்கை உறுதி: மத்திய அமைச்சர் போக்ரியால்

சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா தற்கொலை விவகாரத்தில், விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் மக்களவையில் தெரிவித்தார்.

சென்னை ஐஐடி-யில் கேரள மாணவி தற்கொலை செய்தது தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி, மக்களவையில் கேள்வி எழுப்பினார். அப்போது பேசிய கனிமொழி, நாடு முழுவதும் உயர்கல்வி நிறுவனங்களில் 53 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது ஏன் என்று கேட்டார்.

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக இதுவரை ஒருவர் கூட கைதாகவில்லை. பாத்திமா தற்கொலை விவகாரத்தில் யாரை பாதுகாக்க முயற்சி நடக்கிறது? எஃப்.ஐ.ஆர் அறிக்கையில் பாத்திமா கூறிய பேராசிரியர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. பாத்திமா தற்கொலை குறித்த தகவல் அறிந்ததும் அவரது பெற்றோர், பாத்திமாவின் அறைக்கு சென்ற போது அந்த அறை முழுவதும் சுத்தம் செய்யப்பட்டிருந்தது.

கல்வி நிலையங்களில் சாதி மற்றும் மத ரீதியிலான பாகுபாட்டிற்கு இடமளிக்கக் கூடாது. உயர்கல்வி நிலையங்களில் பாகுபாடு தொடர்பாக இதுவரை 72 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அதிக மாணவர்கள் உயிரிழக்கும் இடமாக ஐஐடி மாறி வருகிறது என்று கனிமொழி குற்றம்சாட்டினார்.

இதற்கு பதிலளித்த மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால், மாணவி பாத்திமா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உயர் கல்வித்துறை செயலாளரை அனுப்பி இருக்கிறோம் என்றார்.

சென்னை ஐ.ஜி-யும் ஏற்கனவே விசாரணையை தொடங்கி இருக்கிறார், அவர்கள் தரும் அறிக்கைக்கு உட்பட்டு நிச்சயம் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ரமேஷ் போக்ரியால் உறுதி அளித்தார்.

இதற்கிடையே, சென்னையில் ஐ.ஐ.டி. யில் மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம் தொடர்பாக 2 மாணவர்கள் தடையை மீறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஐ.ஐ.டி பேராசிரியர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் எனவும் மாணவர்கள் பிரச்சனையை பற்றி வெளிப்படையாக ஆய்வு நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

98 − = 92