நெஞ்சம் நெகிழ வைத்தது நேற்று நான் பார்த்த இந்த ஒரு புகைப்படம் !

இதோ , இந்தப் படத்தின் இடது ஓரத்தில் நிற்கும் இந்த இளம்பெண்! தன்னைத் தூக்கி வளர்த்த , தன் தலையை பாசத்துடன் தடவிக் கொடுத்த , அள்ளி அரவணைத்து அன்போடு வளர்த்த , தன் அப்பாவின் கைகளைத் தான் நேருக்கு நேர் பார்க்கிறாள். கைகள் மட்டும்தான் இங்கே இருக்கின்றன. ஆனால் அவள் அப்பா , எப்போதோ கடவுளிடம் போய் சேர்ந்து விட்டார்.

அந்த இளம்பெண்ணின் மனநிலை இருக்கட்டும்; இதோ, அவள் அருகில் நிற்கும் இந்த இளம்பெண்ணின் தாய். அவர் மனநிலை எப்படி இருக்கும்? தனக்கு கை கொடுத்து வாழ்வளித்த, தன் கழுத்தில் மாலையிட்ட தன் கணவனின் கைகளைத்தான் நேருக்கு நேர் இங்கே பார்க்கிறாள்!  ஆனால் அந்த நேசமிகு கணவன்?  பெயர் ஜோசப். கொச்சியை சேர்ந்தவர். ஒரு விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்து விட்டார். 2015 மே மாதம் நடந்தது இது.

அதே நேரத்தில் கொச்சி மாதா அமிர்தானந்தமயி மருத்துவமனையில், வேறு ஒரு பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தார் ஆப்கான் ராணுவ கேப்டன் அப்துல் ரஹீம்.

தீவிரவாதிகளுடன் நடந்த போரில் , ஒரு குண்டு வெடிப்பில் இரு கைகளையுமே இழந்து விட்டார். இவருக்கு செயற்கைக் கைகள் பொருத்த வேண்டும். அதற்காகத் தான் இந்தியா வந்து, இந்த மருத்துவ மனையில் காத்திருக்கிறார் அப்துல் ரஹீம் .

ஒரு புறம் மூளைச்சாவு அடைந்த ஜோசப் , மறுபுறம் கைகளை இழந்த அப்துல் ரஹீம். விபத்தில் மூளைச்சாவு அடைந்து விட்ட ஜோசப்பின் கைகளை எடுத்து , அப்துல் ரஹீமுக்கு பொருத்தினால் என்ன? ஆனால் அதற்கு ஜோசப் குடும்பத்தின் சம்மதம் வேண்டுமே! மருத்துவர்கள் ஜோசப்பின் குடும்பத்தினருடன் பேசினார்கள். ஜோசப்பின் மனைவியும், மகளும் சம்மதித்தனர்.

இறந்து விட்ட ஜோசப்பின் கைகளை எடுத்து , அப்துல் ரஹீமுக்கு பொருத்தும் சிகிச்சை தொடங்கியது. 20 மருத்துவர்கள் கொண்ட குழு, ஏறத்தாழ 15 மணிநேர கடுமையான போராட்டத்திற்குப் பின் , வெற்றிகரமாக இந்த அறுவை சிகிச்சையை செய்து முடித்தார்கள்.   

இந்த மருத்துவக் குழுவின் தலைமை மருத்துவர் பெயர்  சுப்பிரமணியன். கல்லறைக்குள் போய் விட்ட தன் கணவனின் கைகளை மட்டுமே பக்கத்தில் நின்று பார்த்து கண்ணீர் வடிக்கிறார் இந்த மனைவி. அருகிலிருந்து தன் அப்பாவின் கைகளை பார்த்து , அழுது கொண்டே சிரிக்கிறாள் இந்த அன்பு மகள்.

ஒரு அப்துல் ரஹீமுக்கு, ஒரு ஜோசப்பின் கைகள் , ஒரு சுப்பிரமணியனால் பொருத்தப்பட்டது .

“மனித நேயம்” தெரிகிறது. மதம் தெரியவில்லை.

வரலாறுக்காக…விமல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

37 − = 30