சீன பட்டாசு விற்றாலோ, வாங்கினாலோ தண்டனைக்குரியது என அரசு எச்சரிக்கை

சீன பட்டாசுகளை சட்ட விரோதமாக இறக்குமதி செய்து விற்பதும், அவற்றை வாங்குவதும் சட்டவிரோதமான செயல் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

தீபாவளி என்றாலே பட்டாசுகள் தான் நினைவுக்கு வரும். அந்த பட்டாசுகளுக்கு புகழ்பெற்றது, நம் சிவகாசி. குட்டி ஜப்பான் என்று அழைக்கப்பட்டு வந்த சிவகாசியில் உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகள் நாடு முழுவதற்கும் பிரபலமானது.

ஆனால், அண்மை காலமாக சீன பட்டாசுகளின் வரவு, நமது சிவகாசி பட்டாசுத் தொழிலுக்கு வேட்டு வைப்பதாக அமைந்துள்ளது. அன்னிய பட்டாசுகளின் வருகையால், சிவகாசியில் அந்த தொழில் பாதிக்கப்பட்டு தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் உள்ளது.

அத்துடன், தரம் குறைந்த சீனப் பட்டாசுகளால் விபத்துக்கான வாய்ப்புகளும் அதிகம்; சுற்றுச்சூழலுக்கும் பெரும் கேடு விளைவிக்கிறது. சீன பட்டாசுகளின் அதிக நச்சுத்தன்மை, நமது உடலுக்கு கேடு விளைவிக்கிறது.

எனினும், சட்டவிரோதமாக சீன பட்டாசுகளை இறக்குமதி செய்து, விற்பனை செய்வது தொடர்கிறது. மலிவாக கிடைக்கிறதே என்று, அதன் ஆபத்தை உணராமல் நம்மில் பலர் அதை வாங்கி பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில் சீன பட்டாசுகளின் சட்ட விரோத இறக்குமதி, விற்பனை, கொள்முதல் என எல்லாவற்றுக்கும் மத்திய அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. இது தொடர்பாக சுங்கத்துறை முதன்மை ஆணையர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், பட்டாசு இறக்குமதிக்கு அரசு தடை விதித்துள்ளது. சீன பட்டாசுகளை கொண்டு சென்றாலோ, வைத்திருந்தாலோ, மறைத்தாலோ, விற்பனை செய்தாலோ, வாங்கினாலோ, அல்லது எந்த வகையிலாவது கையாண்டாலும், அது சுங்கச்சட்டம்- 1962ன் கீழ் தண்டனைக்கு உரியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன பட்டாசுகளை பயன்படுத்துவது என்பது வெடிபொருட்கள் சட்ட விதிகள், 2008-ன் கீழ் கெடுதியானது; அவை சிவப்பு ஈயம், காப்பர் ஆக்சைடு, லிதியம் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட ரசாயனங்களை கொண்டுள்ளன. இவை மிகவும் ஆபத்தானவை, சுற்றுச்சூழலுக்கு எதிரானது. சீன பட்டாசுகளை பயன்படுத்துவது, இந்திய பொருளாதாரத்தையும் பாதிக்கும் எனவும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.