சேலம், ராமநாதபுரம், நீலகிரியில் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை!

கனமழை காரணமாக சேலம், ராமநாதபுரம், நீலகிரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் காரைக்காலிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பருவமழை வலுவடைந்து வருகிறது. இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இன்று மிக பலத்த மழை பெய்யும் எனவும், வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், நள்ளிரவில் இருந்து கனமழை பெய்து வரும் ராமநாதபுரம், நீலகிரி மற்றும் சேலம் மாவட்டங்களில், பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுடன், கல்லூரிகளுக்கும் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக, தாம்பரம், குரோம்பேட்டை, விமான நிலையம், கிண்டி, வடபழனி, கோயம்பேடு, அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. எனினும், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் வழக்கம் போல் பள்ளிகள் இன்று வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் கனமழை காரணமாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறையை அறிவித்துள்ளார்.