தேர்தல் விதிமீறியதாக 3 பிரிவில் வசந்தகுமார் எம்.பி. மீது வழக்கு

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாரை, நாங்குநேரி காவல்நிலையம் அழைத்துச்சென்று போலீசார் திடீரெனவிசாரணை நடத்தினர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி, விழுப்புரம் விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று காலை தொடங்கி, தற்போது நடைபெற்று வருகிறது.

நாங்குநேரி தொகுதியில் ரெட்டியார்பட்டி நாராயணன் (அ.தி.மு.க.), தி.மு.க. கூட்டணி சார்பில் ரூபி மனோகரன் (காங்கிரஸ்) உள்பட 23 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தொகுதியில், காவல் துறையினருடன் பாதுகாப்புக்கு துணை ராணுவ படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நாங்குநேரி தொகுதிக்குள் நுழைய முயன்றதாக கூறி, கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

அத்துடன், அவரை தொகுதிக்குள் நுழையவிடாமல் தடுத்து, நாங்குனேரி காவல் நிலையத்திற்கு காவல்துறையினர் அழைத்து சென்றனர். அங்கு வைத்து அவரிடம் விசாரணை நடைபெற்றது.


நாடாளுமன்ற உறுப்பினரான எனக்கு சாலையில் செல்லக்கூட உரிமையில்லையா? நாங்குநேரியில் பிரசாரத்தில் ஈடுபட்டால் என்னை கைது செய்யலாம்; நான் என் வீட்டிற்குதான் செல்கிறேன் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரான என்னை கைதி போல அழைத்து வந்தனர் என்று கூறி, வசந்தகுமார் எம்.பி. வாக்குவாதம் செய்தார்.


தேர்தல் அதிகாரி ஜான் கேப்ரியல் கொடுத்த புகாரில், தேர்தல் விதிமுறைகளை மீறி நாங்குநேரி தொகுதிக்குள் நுழைந்ததாக அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்
தேர்தல் நடைபெறும் தொகுதிக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் நுழைய முயன்றது, அவரை போலீசார் தடுத்து, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றதும், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது