3 நாட்களுக்கு அடைமழை ! கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவு

தமிழகத்தின் பல மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி, மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.

குமரி கடல் மற்றும் இலங்கை கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், தமிழகம், புதுவை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திண்டுக்கல், மதுரை, தேனி, நீலகிரி, கோவை மாவட்டள், தென் மாவட்டங்களான குமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் பலத்த மழையை எதிர்பார்க்கலாம். வங்கக்கடல், குமரி கடல் பகுதியில் மீனவர்கள் நாளை மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 3 நாட்களுக்கு மழை தொடரும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஆலோசனை நடத்திய முதல்வர் பழனிசாமி, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

கண்காணிப்பு அதிகாரிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மழை பாதிப்புகளை உண்ணிப்பாக கவனிக்க வேண்டும். மழை, அணைகளின் நிலவரங்கள் குறித்து சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். நிவாரண மையங்களில் மக்களை தங்க வைக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும். பருவ மழையின் தாக்கத்தை உன்னிப்பாக கவனித்து, தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.