ஆதாரம் தருகிறேன்! அறைகூவலுக்கு தயாரா? ராமதாஸுக்கு ஸ்டாலின் சவால்

பாமக நிறுவனர் ராமதாஸ் எனது அறைகூவலை ஏற்றால், முரசொலி அலுவலகம் இருக்கும் இடம் தொடர்பான நிலப்பதிவு ஆதாரம், மூல ஆதாரத்தை காட்ட தயார் என, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

இது தொடர்பாக, தமது சமூகவலைதள பக்கத்தில் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: முரசொலி அலுவலகம் இருக்குமிடம் பஞ்சமி நிலம் எனும் பச்சைப் பொய் ஒன்றை ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அது பஞ்சமி நிலமல்ல; பட்டா நிலம் என்பதை ஆதாரத்துடன் அவருக்கு பதிலாக நான் தருகிறேன்.

பஞ்சமி நிலம் என நிரூபித்தால் நான், அரசியலைவிட்டு விலகத் தயார் . ராமதாஸ் கூறியது பச்சைப் பொய் என்பதை ஊர்ஜிதம் செய்தால் அவரும், அவருடைய மகன் அன்புமணியும் அரசியலைவிட்டு விலகத் தயாரா என அறைகூவல் விடுத்திருந்தேன்.

எனது அறைகூவலை ஏற்பதாக உறுதிசெய்தால், ராமதாஸ் கேட்கும் முரசொலி அலுவலகம் தொடர்பான நிலப்பதிவு ஆதாரம், மூல ஆதாரத்தைக் காட்ட தயார். நேர்மையான அரசியல்வாதியாக இருந்தால் எனது அறைகூவலை ஏற்று ஆதாரத்தை ராமதாஸ் பெற்றுக் கொள்ளலாம். விவகாரத்தை திசை திருப்பாமல், வழக்கமான பாணியில் நழுவிடாமல் அறைகூவலை ராமதாஸ் ஏற்பார் என எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

முரசொலி அலுவலகம் தொடர்பாக, ஸ்டாலின் – ராமதாஸ் இடையே சமூகவலைதள பக்கத்தில் கருத்து மோதல் வலுத்து வருகிறது. பஞ்சமி நிலம் பற்றி பேரும் ஸ்டாலின், பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்ட முரசொலி அலுவலகத்தை விட்டுத்தருவாரா என்று ராமதாஸ் கேட்டிருந்தார்.

இதற்கு பதிலாக, ஸ்டாலின் நேற்று ஒரு பட்டா ஆவணத்தை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், இதை ஏற்காத ராமதாஸ், இருபது ஆண்டுகள் குறித்த பட்டாவை வெளியிடாததன் மர்மம் என்ன என்று, ஸ்டாலினுக்கு இன்று கேள்வி எழுப்பிருந்தது குறிப்பிடத்தக்கது.