2-ம் நிலை காவலர் பணிகளுக்கு வரும் 7-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

தமிழகத்தில் 2-ம் நிலை காவலர் பணிகளுக்கு வரும் 7-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என சீருடை பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

தமிழக காவல்துறையில் உள்ள 3,552 இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்களுக்கு, வருகின்ற ஜூலை 7-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ் நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தின் தலைவரும், டிஜிபியுமான சீமா அகர்வால் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக காவல்துறையில் 3,552 இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளது. அதில், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை, இரண்டாம் நிலை சிறைக் காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு இன்று வெளியிடப்படுகிறது.

 இந்த தேர்வு எழுத விரும்பும் இளைஞர்கள், ஜூலை 7-ஆம் தேதி முதல் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தின் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வுக்கு இந்த இணையத்தளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தேர்வுக்கு ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். காவலர் தேர்வில் முதல் முறையாக பொதுத் தேர்வுடன் தமிழ் மொழித் தகுதித் தேர்வும் அரசு வழிக்காட்டுதலின்படி நடத்தப்படுகிறது. விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், தமிழ்நாடு சீருடை தேர்வு குழும அலுவலகத்திலும், அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், மாநகர காவல் ஆணையர் அலுவலகம் ஆகிய இடங்களில் உதவி மையங்கள் ஜூலை 7-ம் தேதி முதல் செயல்படும். இந்த உதவி மையங்கள் வாரத்தின் 7 நாள்களும் செயல்படும். இந்த உதவி மையத்தை விண்ணப்பதாரர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

82 + = 83