15 நாட்களுக்கு ஒரு முறை கூட குடிநீர் வருவதில்லை பரிதவிக்கும் புதுக்கோட்டை மக்கள் அடிப்படை தேவையை கூட நிறைவேற்றாத அரசு நிதி எங்கே தான் செல்கிறது?

புதுக்கோட்டை நகரில் தலை விரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் முன்வரவில்லை அரசு அதிகாரிகளின் ஆட்டமும் தாங்க முடியாததால் இவர்களை நம்பி எதிர்காலத்தை எப்படி ஓட்ட போகிறோம் என்ற கேள்வியுடன் தவிக்கின்றனர் பாவப்பட்ட புதுக்கோட்டை நகர மக்கள்.

புதுக்கோட்டை நகர மக்களின் நிம்மதியின்மைக்கு என்னதான் முக்கிய காரணம் என்பதை அறிய களத்தில் புதுகை வரலாறு விசாரித்தபோது:

புதுக்கோட்டை நகரில் 42 வார்டுகள் உள்ளன இந்த பகுதிகளில் சுமார் 1.75 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். கடந்த ஆட்சியின் போதே குடிநீர் பிரச்சினை நிலவியதால் திமுக ஆட்சிக்கு வந்தால் தினந்தோறும் குடிநீர் தருவோம் எனக்கூறி சட்டமன்றத் தேர்தலில் எம்எல்ஏ முத்துராஜா, நகராட்சி தலைவர் திலகவதி செந்தில் உள்ளிட்ட கவுன்சிலர்கள் வாக்குறுதி அளித்து வீடு வீடாக சென்று ஓட்டு கேட்டு வெற்றியும் பெற்றனர். ஆனால் நிலைமை கொஞ்சம் கூட மாறவில்லை அதிமுக ஆட்சியின் அவலம் தொடர்கிறது. புதுக்கோட்டைக்கு 1999ல் திருச்சி ஜீயபுரம் அருகில் இருந்து கூட்டுக் குடிநீர் திட்டம்  என்ற பெயரில் காவிரி நீர் கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த திட்டமானது தற்பொழுது கழுதை தேய்ந்து கட்டெறும்பாய் போய்விட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஒரு நாளைக்கு 12 லட்சம் எம்எல்டி தண்ணீர் சப்பளை செய்கிறோம் என குடிநீர் வாரியம் தெரிவித்தாலும் வருவதோ 4 அல்லது 5 லட்சம் எம்எல்டி தான் என்பது புதுகை வரலாறு கள ஆய்வில் தெரிய வருகிறது.

குடி தண்ணீர் கிடைக்காததால் காந்தி நகர் பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட போது

புதுக்கோட்டை நகராட்சி மக்களுக்கான தண்ணீர் முறையாக வருகிறதா? என யாரும் பொறுப்பான முறையில் ஆய்வு செய்வதில்லை ஒரு முறை இரண்டு முறை சென்று பார்த்துவிட்டு ஆய்வு நடத்தி விட்டோம் என போட்டோக்களை மட்டும் அனுப்பி பகிர்ந்து வருகின்றனர் அதிகாரிகள். எம்எல்ஏ மற்றும் நகராட்சி சேர்மன் ஆகிய இருவரும் ஒரு சில முறை மட்டும் ஆய்வு செய்துள்ளனர். நகரில் விநியோகிக்கப்படும் குடிநீரானது பொது மக்களுக்கு போதுமானதாக இல்லை குறைந்தபட்சம் ஒவ்வொரு பகுதிக்கும் 15 நாட்களுக்கு ஒரு முறையும் மாதத்திற்கு இரண்டு நாட்களுக்கு மட்டுமே குடிநீர் சப்ளை ஆகிறது இதை வைத்துக்கொண்டு எப்படி பயன்படுத்துவது என பெரும்பாலான பெண்கள் குடும்ப தலைவிகள் புலம்புகின்றனர். ஒரு குடும்பத் தேவைக்கு சராசரியாக ஒரு நாளைக்கு ஆயிரம் முதல் ஆயிரத்து 500 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது ஆனால் இரண்டு நாட்களுக்கு ஒரு முறையோ, மூன்று நாட்களுக்கு ஒரு முறை கூட குடிநீர் வருவதில்லை பெரும்பாலான குடிநீர் குழாய்கள் நவராத்திரி கொலு பொம்மைகளாகவே காட்சி தருகிறது.

குடிநீர் தட்டுப்பாடு குறித்து நகராட்சி ஆணையரிடமோ மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடமோ கேட்டால் திருச்சியிலிருந்து குடிநீர் வடிகால் வாரியம் போதுமான அளவிற்கு தண்ணீரை தருவதில்லை என குற்றம் சாட்டுகிறார்கள் ஆனால் மக்களின் நலன் கருதி அங்கிருந்து தண்ணீரை பெறுவதில் இவர்கள் முனைப்பு காட்டுவதில்லை என்பது நன்கு தெரிய வருகிறது. இந்த பிரச்சனைக்கு நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சர் நேருவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகிறதா? இல்லையா? என்ன நடக்கிறது என்பது மர்மமாகவே உள்ளது. மேலும் ஜீயபுரத்தில் இருந்து விநியோகிக்கப்படும் குடிநீர் வரும் வழியில் உள்ள பல்வேறு கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள் அனைத்திற்கும் விநியோகம் செய்யப்பட்டு அங்கும் குடிநீர் கட்டணமாக பெருந்தொகையை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வசூலிக்கின்றது அதேபோல் புதுக்கோட்டை நகராட்சி சார்பிலும் பெருந்தொகை குடிநீர் கட்டணமாக செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் மற்றும் நிர்வாகிகள் முறையாக குடிநீர் சப்ளை செய்வதில்லை என நகராட்சி துறையினர் குடிநீர் வடிகால் வாரியத்தின் மீது குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர்.

மாவட்ட கலெக்டர் கவிதா ராமு

இந்த பஞ்சாயத்தானது ஒவ்வொரு முறையும் நகரில் குடிநீர் தட்டுப்பாடு வரும் பொழுது மட்டும் பேசப்படுவதும் அதனை தொடர்ந்து இரண்டு நாட்கள் மட்டும் சீரான வினியோகம் நடைபெறுவதும் மீண்டும் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் தொடர்வதும் வாடிக்கையாக இருக்கின்றது. இந்த குடிநீர் பிரச்சினை குறித்து ஆளும் திமுக உறுப்பினர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் நகர்மன்ற கூட்டத்தில் பலமுறை விவாதம் செய்தும் எந்த பயனும் இல்லை பருவநிலை மாறுபாட்டால் பல்வேறு நாடுகளில் வறட்சி நிலவி வந்தாலும் கடவுளின் கருணையால் தமிழகத்தில் அனைத்து ஆறுகளிலும் மழை வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டுதான் உள்ளது. இந்த சூழலிலும் புதுக்கோட்டையில் குடிநீர் பிரச்சினை நிலவுவது அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளின் அலட்சியம் தான் முதல் காரணம். இதற்கிடையில் புதுக்கோட்டை நகரில் கேன் குடிநீர் விற்பனையும், வல்லத்திராகோட்டையில் இருந்து லாரியில் கொண்டு வரும் குடிநீர் விற்பனையும் கனஜோராக நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை நகராட்சிக்கு குடிநீர் வரி செலுத்தும் பொதுமக்கள் லாரிகளில் பணம் கட்டி தண்ணீர் வாங்கி குடிக்கும் சூழல் தொடர்ந்து நடக்கிறது.

குடி தண்ணீர் கிடைக்காததால் திருக்கோகர்ணத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

புதுக்கோட்டை நகரில் மட்டும் குடிநீர் விற்பனையானது 1 நாளைக்கு இரண்டு லட்ச ரூபாய் முதல் கல்யாணம் மற்றும்  திருவிழா நேரங்களில் ரூபாய் 5 லட்சம் வரை நடைபெறுகிறது. மத்திய, மாநில அரசுகள் குடிநீர் தேவைக்கு முக்கியத்துவம் தந்து பல்வேறு நிதிகளை ஒதுக்கினாலும் கூட இங்கு எந்த திட்டமும் முறையாக நடைபெறுவதில்லை இதற்கும் மாறாக நகரம் முழுவதும் பூங்காக்கள் அமைக்கும் பணியும் தூர்வாரும் பணியும் மட்டுமே நடைபெறுகிறது. குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டியது  நகராட்சியின் முக்கிய கடமையாகும் ஆனால் நகராட்சியின் ஆணையர் மற்றும் பொறியாளர்கள் எது எப்படி நடந்தால் என்ன என்ற அலட்சிய மனப்பான்மையுடன் தான் இருந்து வருவதை கண்கூடாக பார்க்க முடிகின்றது. ஆளுங்கட்சியினர் உட்கட்சித் தேர்தலிலும் எதிர்க்கட்சியினர் கோஷ்டி சண்டையிலும் மட்டுமே ஆர்வம் கட்டி வருகின்றனர். போராடும் சிறுசிறு கட்சியினரின் கோரிக்கைகளோ அதிகார வர்க்கத்தில் உள்ளவர்களின் குப்பைத்தொட்டிகளுக்கு தான் செல்கின்றது. மக்களின் தலையெழுத்து இதுதான் என முடிவு செய்து தங்கள் பிழைப்பை பார்ப்போம் என வெறுப்பில் காலத்தை கடத்துகின்றனர் என்பது மட்டும் உண்மை.

குடி தண்ணீர் கிடைக்காததால் திருக்கோகர்ணத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

குடிநீரை திருடி சேமிக்கும் கயவர்களுக்கு நகராட்சி உதவி

புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள 42 வார்டுகளிலும் குடிநீர் வினியோகம் செய்யும் போது அங்கு குடிநீர் இணைப்பு பெற்றுள்ள அனைவருக்கும் குடிநீர் முழுமையாக கிடைக்கின்றதா என்பது மிகப்பெரிய கேள்வி குறிதான். காரணம் பெரிய பெரிய மாட மாளிகை கட்டி உள்ளவர்களும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி வாடகைக்கு விடுபவர்களும் முன்னாள் இந்நாள் மக்கள் பிரதிநிதிகளில் பலரும் தங்கள் சொந்தங்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் துணை போகும் விதத்தில் பல கிலோமீட்டருக்கு அப்பாலில் இருந்து கொண்டு வரப்படும் காவிரி நீரை மின் மோட்டார் மூலம் பூமிக்கு அடியில் சுரங்கம் அமைத்தும் வீட்டுக்கு மாடியிலும் நூற்றுக்கணக்கான வீடுகளில் சுமார் 5 ஆயிரம் முதல் பத்தாயிரம் லிட்டர் கொள்ளளவு வரையில் காவிரி நீரை சேமித்து வைத்து அவர்கள் மட்டுமே அனுபவித்து வருகின்றனர். இதனால்  மேடு பகுதிகளுக்கு தண்ணீர் செல்வது கேள்விக்குறியாக இருக்கின்றது அதிலும் பாதிக்கப்படுவது சாமானியர்களாகவே உள்ளனர்.

மின் மோட்டார்களை பறிமுதல் செய்ய வேண்டும்

தேவைக்கு மீறி குளிக்கவும், கழிவறைகளுக்கு பயன்படுத்தவும், உப்புத் தண்ணீரில் குளிப்பதால் தங்களின் சரும பிரச்சனை பாதிக்கப்படும் என கூறி சில அபி மேதாவிகள் காவிரி நீரை மின் மோட்டார் மூலம் பதுக்கி கொள்கின்றனர் அவர்கள் யார் யார் என்று நகராட்சி நிர்வாகத்திற்கு நன்கு தெரியும் அவர்கள் வீடுகளுக்குள் அதிரடியாக புகுந்து பைப் லைனை ஆய்வு செய்து மின் மோட்டார்களை பறிமுதல் செய்ய வேண்டும். காவிரி நீர் கிடைக்காமல் உப்பு தண்ணீரை குடித்து பலர் உடல் உபாதைகளுக்கு ஆளாகி தங்களது கிட்னியை இழக்கும் சூழல்  புதுக்கோட்டையில் அதிகரித்து வருவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. சில உயர் பொறுப்பு அதிகாரிகள் நாள்தோறும் தங்களின் குளியல், கழிவறைகளுக்கு காவிரி நீரை மட்டுமே பயன்படுத்தி வருவது இன்றைய சமூகத்தின் அபத்தம்.

குடிநீர் பிரச்சினையை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் பெண்களுக்கு இலவசமாக குடிநீர் வழங்கி போராட்டம் நடத்திய போது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

58 − 57 =