13,000 டன் எடை சென்னை மெட்ரோ ரயிலுக்குத் தயாராகும் தண்டவாளங்கள்

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 13 ஆயிரம் டன் எடையுள்ள தண்டவாளங்கள் தயார் செய்யப்படவுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டம் 54.1 கி.மீ தொலைவிற்கு விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரை, சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை என இரண்டு வழித்தடங்களில் முழுமையாக செயல்பாட்டில் உள்ளது.

இரண்டாம் கட்ட திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில் 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் பணிகள் நடைபெறுகின்றன. இதன்படி 3-வது வழித்தடம் மாதவரம் முதல் சிறுசேரி வரையில் 45.8 கி.மீ நீளத்திற்கும், 4-வது வழித்தடம் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 26.1 கி.மீ நீளத்திற்கும், 5-வது வழித்தடம் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 47.0 கி.மீ நீளத்திற்கும் இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்தும் 2026-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இவற்றில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை இயக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வகை மெட்ரோ ரயில் தயாரிப்பிற்கான 946 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.