‘ஸ்புட்னிக் – வி’ தடுப்பூசியை அனுமதிக்க அதன் நிறுவனத்திடம் உலக சுகாதார அமைப்பு கோரிக்கை

‘ஸ்புட்னிக் – வி’ தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதிக்க, மேலும் சில தரவுகளை, அதன் தயாரிப்பு நிறுவனத்திடம் உலக சுகாதார அமைப்பு கோரி உள்ளது.

நம் நாட்டில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் – வி தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு உபயோகிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இங்கு இந்த தடுப்பூசிகளை தயாரிக்க ஏழு இந்திய நிறுவனங்களுடன், ரஷ்ய நேரடி முதலீடு நிதியம் ஒப்பந்தம் செய்து உள்ளது.இதையடுத்து, ரஷ்யாவில் இருந்து ஸ்புட்னிக் – வி தடுப்பூசிகளை இந்தியாவுக்கு இறக்குமதி செய்யும் பணிகள் துவங்கப்பட்டன. இந்த தடுப்பூசியை, தெலுங்கானா தலைநகர் ஐதராபாதை தலைமையிடமாக வைத்து இயங்கும் ‘டாக்டர் ரெட்டிஸ் லேபாரட்டரீஸ்’ நிறுவனம் வினியோகித்து வருகிறது.
இந்த ஸ்புட்னிக் – வி தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்தும் தடுப்பூசிகளின் பட்டியலில் இணைக்கக் கோரி, உலக சுகாதார அமைப்பிடம் விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த விண்ணப்பத்தை நேற்று பரிசீலித்த உலக சுகாதார அமைப்பு, ஸ்புட்னிக் – வி தடுப்பூசி குறித்த மேலும் சில தரவுகளை சமர்ப்பிக்கக் கோரி, அதன் தயாரிப்பு நிறுவனமான, ‘கமாலியா’ தேசிய ஆராய்ச்சி நிறுவனத் திடம் கேட்டுள்ளது.’அனைத்து தரவுகளும் சமர்ப்பிக்கப்பட்ட பின்பே இதில் இறுதி முடிவு எடுக்கப்படும்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.