புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வானத்திராயன்பட்டி கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள மதர் தெரேசா வேளாண்மைக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவிகள் அபிநயா,ஆதிரா கிருஷ்ணன், தனலட்சுமி, ஜனனி, கயல்விழி, மாலினிஜெயஸ்ரீ, நர்மதா,ஓவியா, ரூபாஸ்ரீ, சாருதர்ஷினி, சுமதி ஆகியோர் அங்குள்ள விவசாயிகளுக்கு தென்னை மரங்களைத் தாக்கும் காண்டாமிருக வண்டினை கட்டுப்படுத்தும் முறையைப் பற்றி விவரித்தனர்.
அதன் தாக்கத்தின் முதன்மையான அறிகுறி, நன்றாக வளர்ந்த ஓலைகளில் வைர வடிவில் இருக்கும் வெட்டுக்கள் ஆகும். தென்னங்கன்றுகளில் அடிப்பாகத்தில் பண்ணாடைகளின் உட்பகுதியில் மூன்றரை கிராம் எடையுள்ள மூன்று பூச்சிக்குண்டுகளை (பாச்சை உருண்டைகளை (அ) அந்துப் பூச்சி உருண்டைகளை) ஒரு கன்றுக்கு என்ற அளவில் 45 நாட்களுக்கு ஒருமுறை வைத்து கன்றுகளை வண்டின் தாக்குதலிலிருந்துத் தவிர்க்கலாம். வேப்பங்கொட்டைத் தூள் அல்லது வேம்பு பருப்புத் தூள் 150 கிராமுடன் இரண்டு மடங்கு மணலைக் கலந்து மடல் பகுதிகளில் உள்ளிருந்த மூன்றாவது மட்டைகளின் அடிப்பகுதியில் பண்ணாடைகளுக்கு இடையில் வைப்பதன் மூலம் வண்டுகளால் ஏற்படும் சேதத்தைத் தவிர்க்கலாம்.ரைனோலூர் (Rhinolure) இனக்கவர்ச்சிப் பொறிகளை இரண்டு எக்டருக்கு ஒன்று வீதம் வைத்து வண்டுகளைக் கவர்ந்து அழிக்கலாம்.இம்மூன்று முறைகளையும் செயல்முறையாகக் காட்டினர்.