விவசாயப் பொருட்களுக்கு ஆதார விலையை தீர்மானித்திடுக – விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

விவசாயிகள் விளைவிக்கின்ற பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய, மாநில அரசுகள் தீர்மானிக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

கேரளாவில் நடைபெற்ற அகில இந்திய விவசாயிகள் சங்க மாநாட்டு முடிவுகளை விளக்கி புதுக்கோட்டையில் இன்று பேரவைக்கூட்டம் நடைபெற்றது. பேரவைக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.பொன்னுச்சாமி தலைமை வகித்தார், அகில இந்திய மாநாட்டு முடிவுகளை விளக்கி மாநில துணைத் தலைவர் பி.டில்லிபாபு உரையாற்றினார், மாவட்டக்குழு முடிவுகளை விளக்கி மாவட்டச் செயலாளர் ஏ.ராமையன் பேசினார், மாவட்டப் பொருளாளர் எம்.பாலசுந்தரமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் த.அன்பழகன்,  எம்.வீரமணி,  சி.பாண்டியன், எம்.நாராயணமூர்த்தி, ஆர்.சி.ரெங்கசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பிரதமர் மோடி விவசாயிகளக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி ஏப்ரல் 5 டெல்லியில் நடைபெற உள்ள போராட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து 200-க்கும் மேற்பட்ட விவசாயிகளைப் பங்கேற்கச் செய்வது என பேரவையில் முடிவெடுக்கப்பட்டது. மேலும், விவசாயிகள் விளைவிக்கின்ற பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை ஒன்றிய, மாநில அரசுகள் தீர்மானிக்க வேண்டும். காவிரி, வைகை, குண்டாறு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும், மின்சார திருத்தச் சட்டத்தை ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டுமென பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.