வாலிபர் சங்கம் சார்பில் வேங்கைவயல் குடிநீர் தொட்டி இடிக்கும் போராட்டம் பங்கேற்றவர்கள் கைது

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட குடிநீர்த் தொட்டியை இடிக்கும் போராட்டம் நடத்த முற்பட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 131 பேரை போலீசார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் தலித் மக்கள் வசிக்கும் குடியிருப்பில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் டிச. 26ஆம் தேதி தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சிபிஎம், சிபிஐ, விசிக , சிபிஐ(எம்எல்) உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் ஜனநாயக மாதர் சங்கம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் போராட்டங்கள் நடத்தியதோடு குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியது.  சம்பவம் குறித்து வெள்ளனூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், வழக்கு விசாரணையில் முன்னேற்றம் இல்லாததால் சிபி சிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வேங்கைவயலில் நின்று கொண்டிருக்கும் குடிநீர்த் தொட்டியை இடிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில மையம் சார்பில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட குடிநீர்த் தொட்டியை இடிக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சங்கத்தின்  மாநிலச் செயலர் ஏ.வி. சிங்காரவேல் தலைமையில் மாநிலத் தலைவர் சி. கார்த்திக், பொருளாளர் பாரதி, துணைத் தலைவர் பா. லெனின், துணைச் செயலர் செல்வராஜ், செயற்குழு உறுப்பினர்கள் ஏசுராஜ், சந்துரு, பொதுக்குழு உறுப்பினர் அருளரசன், புதுக்கோட்டை மாவட்ட்ச செயலர் ஏ. குமாரவேல், துணைத் தலைவர் கோபால், துணைச் செயலர் சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் வேங்கைவயல் நோக்கி இன்று புறப்பட்டனர்.

திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வெள்ளனூர் செல்லும் சாலையில் ஊர்வலமாகச் செல்லும்போது, போலீசார் வழியில் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அனைவரும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து 6 மகளிர் உள்பட 131 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து வாலிபர் சங்கத்தின் மாநில நிர்வாகிகளுடன் வருவாய்க் கோட்டாட்சியர் (பொ) எம். மாரி தலைமையில் காவல்துறையினர், வருவாய்த் துறையினர் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்தப் பேச்சுவார்த்தையில், வழக்கு விசாரணையில் இருப்பதால் குடிநீர்த் தொட்டியை இடிக்க முடியாது என்றும், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டவுடன் தொட்டி இடிக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.

போராட்டம் குறித்து வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலர் சிங்காரவேல் செய்தியாளர்களிடம் கூறுகையில்: வேங்கைவயலில் அவமானகரமான சின்னமாக  நின்று கொண்டிருக்கும் குடிநீர்த் தொட்டியை இடிக்கும் போராட்டத்தை நடத்த முயற்சித்தபோது காவல் துறையினர் மிகவும் கடுமையாக நடந்து கொண்டனர். இத்தனை நாளாகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இது கண்டிக்கத்தக்கது. இதே நிலை தொடர்ந்தால் மீண்டும் வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார். வாலிபர் சங்கத்தின் இந்தப் போராட்டத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. கைது செய்யப்பட்டோர் தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.