வாக்குச்சீட்டுகளை கைப்பற்றியதால் பரபரப்பு: உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் தள்ளிவைப்பு

வாக்குச்சாவடிக்குள் புகுந்து வாக்குச்சீட்டுகளை சிலர் கைப்பற்றியதால் 6 ஆண்டுகளுக்குப்பிறகு நேற்று நடைபெற்ற சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் (எம்எச்ஏஏ) தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர், நூலகர் மற்றும் 11 முதுநிலை, இளநிலை செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்றுகாலை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த தேர்தலுக்கான ஏற்பாடுகளை டெல்லர் கமிட்டி தலைவரான மூத்த வழக்கறிஞர் எம்.கே.கபீர் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். நேற்றுகாலை சென்னை உயர் நீதிமன்றகலையரங்கில் தேர்தல் தொடங்கியது. வாக்களிக்க தகுதியான வழக்கறிஞர்கள் வாக்குச்சீட்டைப் பெறுவதற்கான க்யூ-ஆர் கோடு அடையாள அட்டை நெட்வொர்க் பிரச்சினையால் சரியாக வேலை செய்யவில்லை என்றும், தேர்தல் பணியில்தனியார் கல்லூரி மாணவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டி, வழக்கறிஞர்கள் சிலர் மொத்தமாக க்யூ-ஆர் கோடு அடையாள அட்டைகளை அள்ளிச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்குள் சிலர் வாக்குச்சாவடிக்குள் நுழைந்து, வாக்களிக்கப்பட்ட வாக்குச்சீட்டைக் கைப்பற்றி வெளியே எடுத்துச் சென்றனர். இதனால் வழக்கறிஞர்களில் ஒரு பிரிவினர் அங்கிருந்த மேஜை,நாற்காலிகளை அடித்து நொறுக்கினர். பின்னர் வழக்கறிஞர்கள் தரையில் அமர்ந்து கோஷம் எழுப்பி,தர்ணாவில் ஈடுபட்டனர். அதையடுத்து இந்த தேர்தலை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பதாக தேர்தல் அதிகாரியான மூத்த வழக்கறிஞர் எம்.கே.கபீர் அறிவித்தார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், “இந்த தேர்தலில் துரதிர்ஷ்டவசமாக சிலர் வாக்குச்சாவடிக்குள் நுழைந்து வாக்குச்சீட்டையும், க்யூ-ஆர் கோடு அட்டையையும் எடுத்துச் சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் சம்பந்தப்பட்ட நீதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டு, பின்னர் தேர்தல் தேதி அறிவிக்கப்படும்” என்றார். தேர்தலுக்காக வழக்கறிஞர்கள் கடந்த ஒன்றரை மாதங்களாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தீவிரபிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகளை சேகரித்த நிலையில், திடீரென நடந்த இந்த சம்பவத்தால், தேர்தலில் போட்டியிட்ட வழக்கறிஞர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த தேர்தல் சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடமும் வழக்கறிஞர்கள் முறையீடு செய்துள்ளனர்.