வருமுன் காப்போம் திட்டத்தை தொடர்ந்து மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடக்கம்: அமைச்சர் மெய்யநாதன்

கடந்த 2011ஆம் ஆண்டு கிராமப்புற மக்களின் மருத்துவ சேவைக்காக வருமுன் காப்போம் என்ற திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி செயல்படுத்தினார்,அவரின் தொடர்ச்சியாக தற்போது மக்களை தேடி மருத்துவம் என்ற மகத்தான திட்டத்தை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் செயல்படுத்தி மக்களின் வரவேற்பை பெற்று உள்ளார் என புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் மக்களைத்தேடி மருத்துவ திட்டத்தை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சிக்கு, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமை வகித்தார். இதனைத்தொடர்ந்து அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து மருத்துவ வாகனத்தின் சேவையை தொடங்கி வைத்தார்.இதன் பின்னர், அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில்…
பொதுமக்களின் இல்லங்களுக்கே சென்று மாத்திரை மருந்துகளை வழங்கக் கூடிய அற்புதமான திட்டம் தான் இந்த மக்களை தேடி மருத்துவ திட்டம் என்றும் மக்களுக்கு மருத்துவத்தை எளிமைப்படுத்தும் வகையில், கடந்த 2011ஆம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்த போது, கிராமங்கள் தோறும் மருத்துவர்கள், செவிலியர்களை அனுப்பி வைத்து வருமுன் காப்போம் என்ற திட்டத்தை கொண்டு வந்தார் என்றும் மேலும், ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பொதுமக்களுக்காக மருத்துவ சேவை கிடைக்கும் வகையில், கலைஞர் காப்பீட்டு திட்டம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது என்றும் அதன், மூலம் லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டன என்றும் அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.
அதேபோல், தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின், பொதுமக்களுக்கு மருத்துவ சேவை கிடைக்கும் வகையில், சுகாதார நிலையத்தின் வாகனத்திள் மூலம் பொதுமக்களின் வீட்டிற்கே சென்று மாத்திரை மருந்துகளை வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளார் என்றும் இத்திட்டம், பொதுமக்களுக்கு ஒரு வரப்பிரசாதமான திட்டம் என்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.