வருகிற ஆகஸ்ட் 15ம் தேதியன்று கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் “கிராம சபைக்” கூட்டங்கள் நடத்தப்படவேண்டும் – கலெக்டரிடம் கமல்ஹாசன் மனு

வருகிற ஆகஸ்ட் 15ம் தேதியன்று கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் “கிராம சபைக்” கூட்டங்கள் நடத்தப்படவேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று, நாளை 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று இரவு கோவைக்கு வந்தார். அதன்பின் இன்று காலை கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- மகாத்மா காந்தியின் கனவான “கிராம சுயாட்சிக்காக” மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து குரல்கொடுத்து வருகிறது.

கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகளை வலுவாக்குவதற்காக பல்வேறு களப்பணிகள், கருத்தரங்கங்களை முன்னெடுத்துள்ளோம். குறிப்பாக கிராம ஊராட்சி அமைப்பின் வேரான “கிராம சபை” விழிப்புணர்விற்காகத் தொடர்ந்து பாடுபட்டு வந்திருக்கிறோம். இந்த அடிப்படையில், வருகிற ஆகஸ்ட் 15ம் தேதியன்று (15-08-2021) கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் “கிராம சபைக்” கூட்டங்கள் நடத்தப்படவேண்டுமெனக் கோரி இம்மனுவினை அளிக்கிறேன்.

மேலும், இந்திய அரசமைப்புச் சட்டம் 243A மற்றும் தமிழ்நாடு ஊராட்சி சட்டம் 1994ல் குறிப்பிட்டுள்ள நடைமுறைகளின்படி “கிராம சபைக்” கூட்டங்கள் நடத்தப்படுவதைத் தாங்கள் உறுதிசெய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் ஏழு நாட்களுக்கு முன்பாக கிராமசபைக் கூட்டத்திற்கு அழைப்புத் தருவது. கிராம சபையில் முன்வைக்கப்படவேண்டிய கிராம ஊராட்சியின் வரவு-செலவு அறிக்கை, வங்கிக்கணக்கு புத்தகங்கள், தணிக்கை அறிக்கை உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும். கிராம நலன்கருதி மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகளானது முறையாகத் தீர்மானங்களாகப் பதிவு செய்யப்படுதல் வேண்டும். கிராமசபை முடிவுற்ற பின்பு, கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் நகலானது பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படவேண்டும். தீர்மான நகல் கேட்கும் நபர்களுக்கு தாமதமின்றி நகலானது தரப்படவேண்டும்.

கிராம சபைக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதற்கு, குறைந்தபட்சம் பங்கேற்க வேண்டிய கிராம சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை (குறைவெண் வரம்பு(quorum)) உறுதிப்படுத்துவதற்கு வேண்டிய விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொள்ளவேண்டும். கிராமசபைக் கூட்டத்தை வீடியோ, புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்த வேண்டும். கிராமசபை உறுப்பினர்கள், கிராம சபைக் கூட்ட நிகழ்வுகளை புகைப்படம், வீடியோ எடுப்பதற்கு அனுமதி தரப்படவேண்டும். கிராம சபைக் கூட்டமானது ஊராட்சிக்குட்பட்ட அனைத்து குக்கிராமங்களிலும் நடத்தப்படுவதை உறுதிசெய்வதற்காக, சுழற்சி முறையில் வெவ்வேறு குக்கிராமங்களில் கூட்டமானது நடத்தப்படவேண்டும் உள்ளிட்ட நடைமுறைகளை அவசியம் செயல்படுத்த வேண்டுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.