வணிகரிடம் ரூ.10 லட்சத்தை பறித்த வழக்கு – தலைமறைவாக இருந்த பெண் காவல் ஆய்வாளர் கைது

நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் வசந்தி வணிகரிடம் 10 லட்சம் ரூபாயை மிரட்டி பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சேர்ந்த அர்சத் என்பவர் பேக் கம்பெனிக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக கடந்த மாதம் 5ஆம் தேதி 10 லட்சம் ரூபாய் பணத்துடன் மதுரை தேனி ரோடு, அருகில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது பால்பாண்டி, பாண்டியராஜன், உக்கிரபாண்டி, சீமைச்சாமி மற்றும் நாகமலைபுதுக்கோட்டை காவல் ஆய்வாளர் வசந்தி ஆகியோர் அர்சத் வைத்திருந்த 10 லட்சம் ரூபாய் பணத்தை அச்சுறுத்தி பிடிங்கிக் கொண்டதாக கடந்த மாதம் 27ஆம் தேதி கொடுத்த புகாரில் மதுரை மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின் பேரில் இவ்வழக்கின் புலன் விசாரணை அதிகாரி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ரவிக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு 10ஆம் தேதி இவ்வழக்கில் தொடர்புடைய தேனியை சேர்ந்த பால்பாண்டி என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 61ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

பின்னர் உக்கிர பாண்டியிடமிருந்து ரூ.1,20,000, மற்றும் சீமைச் சாமியிடமிருந்து 45,000 பணத்தையும் கைப்பற்றி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவ்வழக்கில் இதுவரை ரூ2,26,000 பணம் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக இருந்த மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல்நிலைய ஆய்வாளர் வசந்தியை ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமறைவாக இருந்தார். இதையடுத்து தற்போது தனிப்படையினர் இன்ஸ்பெக்டர் வசந்தியை கைது செய்துள்ளனர்.