ராஜீவ் கொலை வழக்கு : ஆளுநர் ஒப்புதல் இல்லாமல் விடுதலை செய்ய வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டில் நளினி மனு

ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளியான நளினி தங்களை ஆளுநர் ஒப்புதல் இல்லாமல் விடுதலை செய்ய வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்வது தொடர்பாக கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.

அந்த தீர்மானத்தின் மீது ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல், தங்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி நளினி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதன்படி, அவரது மனுவில் கூறியுள்ளதாவது:- கடந்த 2000ம் ஆண்டு தமக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அதன் பின், 10 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த 3,800 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் தமிழக அமைச்சரவை தீர்மானத்தின் அடிப்படையில் செயல்பட வேண்டிய ஆளுநர், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த மனுவானது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இந்த வழக்கை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.