மூன்றாம் உலகப் போருக்கு வாய்ப்பிள்ளை கோல்டன் குளோப் நிகழ்வில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நம்பிக்கை

“மூன்றாம் உலகப் போர் வராது. உக்ரைன் மீதான அடக்குமுறை உலக நாடுகளின் உதவியுடன் முறியடிக்கப்படும்” என்று அந்நாட்டு அதிபர் வொலொடிமர் ஜெலன்ஸ்கி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திரைத் துறையினர் உயரிய விருதாக கருதும் ஆஸ்கர் விருதுக்கு அடுத்தப்படியாக கோல்டன் குளோப் விருது விளங்கி வருகிறது. ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படுகிறது. Hollywood Foreign Press Association சார்பில் நடக்கும் இந்த விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக உரையாற்றினார் அதிபர் ஜெலன்ஸ்கி. அவர் தனது உரையில், “முதலாம் உலகப் போரில் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோயின. இரண்டாம் உலகப் போரிலும் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஆனால் மூன்றாம் உலகப் போர் நடக்காது. அப்படி நடக்க இது ஒன்றும் மூன்று பாகங்கள் கொண்ட நாடகமல்ல.

மேலும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் அடக்குமுறையை நிறுத்த உலக நாடுகள் உதவும். இப்போது 2023-ஆம் ஆண்டு. ஆனால், இன்னமும் உக்ரைனில் போர் ஓயவில்லை. ஆனால் யார் வெற்றி பெறுவார்கள் என்பது ஏற்கெனவே ஊரறிந்ததாக உள்ளது. இரண்டாம் உலகப் போர் முடியும் தருவாயில் தான் 1943-ல் முதல் கோல்டன் குளோப் விருது வழங்கும் நிகழ்வு தொடங்கியது. அப்போதும் யார் வெற்றி பெறுவார்கள் என்பது உலகிற்கே தெரிந்த விஷயமாக இருந்தது.

உக்ரைன் சுதந்திரத்திற்காக, ஜனநாயகத்திற்காக நடத்தும் இந்தப் போரில் ஆதரவளிக்கும் அனைவருக்கும் நன்றி” என்றார். ஜெலன்ஸ்கியின் பேச்சுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.