முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள் மீது நாளை விசாரணை

டெண்டர் முறைகேடு வழக்குகளை ரத்து செய்யக் கோரி எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள் மீது நாளை விசாரணை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள் மீது நாளை விசாரணை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி வேலுமணி சென்னை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்களை தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்கவும், வேலுமணிக்கு ஆதரவாக மத்திய அரசு வக்கீல் ஆஜராகவும் தமிழக அரசுத்தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆட்சேபங்களை தலைமை நீதிபதி அமர்வு, நிராகரித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, வேலுமணி தாக்கல் செய்த மனுக்களை, எம்.பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தது. மேலும், வேலுமணி தரப்பு கோரிக்கையை ஏற்று, வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட தடையை நீட்டித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில், எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் இரு நீதிபதிகள் அமர்வான, நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அடங்கிய அமர்வில், லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் தமிழக அரசின் தலைமை குற்றவியல் வக்கீல் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி, பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு நகலை தாக்கல் செய்து, முன்னாள் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மனுக்களை அவசரமாக விசாரிக்க வேண்டும் என முறையீடு செய்தார். ஊழல் தடுப்பு சட்டத்தில் இடைக்கால நிவாரணம் வழங்க தடை உள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். இதையடுத்து, வேலுமணியின் மனுக்களை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இதனடிப்படையில் நாளை இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + 6 =