முதுநிலை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ படிப்புக்கான 2,346 இடங்களின் தரவரிசைப் பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்டார்.

முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நாளை தொடங்கி 6ம் தேதி வரை நடைபெற உள்ளது.  

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 19-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை பெறப்பட்டது. அனைத்து விண்ணப்பங்களும் சான்றிதழ்களும் பரிசீலனை செய்யப்பட்டுள்ள இன்று அதற்கான தரவரிசைப் பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்டார். இவை அனைத்திற்குமான கலந்தாய்வானது இணையதளம் வாயிலாக நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதுகலை மருத்துவப்படிப்பிற்காக அரசு கல்லூரியில் 1,162 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 763 இடங்களும் உள்ளன. முதுகலை பல் மருத்துவத்திற்காக 31 சுயநிதி கல்லூரிகளில் உள்ள 296 முதுநிலை பல் மருத்துவ இடங்கள், 94 பட்ட படிப்பு இடங்கள் என மொத்தம் 2,346 இடங்களுக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அரசு கல்லூரிகளில் முதுநிலை மருத்துவ மேற்படிப்பிற்காக பெறப்பட்ட 6,960 விண்ணப்பங்களில் 6, 893 விண்ணப்பங்கள் தகுதியானதாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. நிர்வாக ஒதுக்கீட்டிற்காக பெறப்பட்ட 2,025 விண்ணப்பங்களில் 286 விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்தவையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

முதுகலை பல் மருத்துவத்திற்கு அரசு கல்லூரிகளில் 679 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதில் 662 விண்ணப்பங்கள் தகுதியானவையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. நிர்வாக ஒதுக்கீட்டில் 341 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதில் 310 விண்ணப்பங்கள் தகுதியானவையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தரவரிசை பட்டியலை இன்று சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்டார்.